/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு ரோந்து திட்டம் துவக்கம்
/
சாலை பாதுகாப்பு ரோந்து திட்டம் துவக்கம்
ADDED : நவ 14, 2024 11:39 PM

திருப்பூர் ; திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில், ஒன்பது பள்ளிகளில் தலா, ஒரு பள்ளிக்கு, 35 முதல், 45 பள்ளி மாணவர்களை வைத்து சாலை பாதுகாப்பு ரோந்து செய்ய புதிய திட்டம் குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று துவங்கப்பட்டது. முதல் கட்டமாக பிஷப் பள்ளி, கதிரவன் பள்ளியில் இந்த திட்டத்தை துணை கமிஷனர்கள் துவக்கி வைத்தனர். மேலும், நஞ்சப்பா பள்ளி, அனுப்பர்பாளையம் அரசு பள்ளி, கொங்கு வேளாளர் பள்ளி, பூலுவபட்டி அரசு பள்ளி, நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி, விஜயாபுரம் அரசு பள்ளியில் இன்று துவங்க உள்ளனர்.
சிறுவருக்கு மன்றம்
குழந்தைகள் தினத்தையொட்டி, ஆத்துப்பாளையம், பாரதி நகரில், 87 உறுப்பினர்களுடன், வாவிபாளையம், திருக்குமரன் அடுக்குமாடி குடியிருப்பில், 42 உறுப்பினர்களுடன், கொடிகம்பத்தில், 75 பேருடன், வஞ்சி நகரில், 35 பேருடன் சிறுவர், சிறுமியர் மன்றம் துவங்கப்பட்டது. ஏற்கனவே, வடக்கில், 83 மற்றும் அனுப்பர்பாளையத்தில், 114 பேருடன் இயங்கி வருகிறது.
தினமும் பள்ளி முடிந்தவுடன் வாழ்க்கை நெறிமுறைகள், போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். விளையாட்டு போட்டிகள், புத்தக வாசிப்பு, ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. மருத்துவ முகாம் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். திறக்கப்பட்டுள்ள மன்றங்கள் வாயிலாக, அவர்களை நல்வழிப்படுத்தவும், வழி தவறி செல்லாமல், சமுதாயத்தில் நல்ல முறையில் வளரும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் தினம்
திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில், குழந்தைகள் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. காலையில், அம்மாபாளையத்தில் உள்ள மரியாலயா காப்பகத்தில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. கமிஷனர் லட்சுமி பங்கேற்று, கேக் வெட்டப்பட்டு, குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். தொடர்ந்து, 'டிசோ' காப்பகத்தில் யோகா பயிற்சி நடந்தது.
திறன் மேம்பாடு
சென்ட்ரல் போலீஸ் சார்பில், கே.வி.ஆர்., நகர் பள்ளி மாணவ, மாணவியருக்கு, சமுதாய கூடத்தில், பொது அறிவு விளையாட்டு திறன் மேம்பாட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பொருட்டு, மாணவ, மாணவியருக்கான கிளப் துவங்கப்பட்டது. துணை கமிஷனர் கிரிஷ் யாதவ், துவக்கி வைத்தார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, சிறப்புரை ஆற்றினார். மாநகராட்சி கமிஷனர் நாகராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, கவிதா, கே.வி.ஆர்., நகர் பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.