ரோடு விரிவாக்க பணி தீவிரம்: நிழல் தரும் மரங்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?
ரோடு விரிவாக்க பணி தீவிரம்: நிழல் தரும் மரங்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?
UPDATED : செப் 28, 2026 09:36 PM
ADDED : செப் 28, 2026 09:23 PM
பல்லடம்: பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில், வெங்கிட்டாபுரம் முதல் காமநாயக்கன்பாளையம் வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறத்திலும் ஏராளமான மரங்கள் உள்ளன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட இம்மரங்கள், சாலையின் இருபுறமும் பசுமைக் குடைபோல் வளர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிழல் வழங்கி வருகின்றன. மேலும், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கும் வாழ்விடமாக விளங்கி வருகின்றன.
பல ஆண்டுகளாக பயனளித்து வரும் இம்மரங்கள், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு செடியை நட்டு, அது முழுமையான மரமாக வளர பல ஆண்டுகள் தேவைப்படும் நிலையில், ஏற்கனவே வளர்ந்து நிழல் வழங்கி வரும் மரங்களை அகற்றுவது வேதனை அளிப்பதாக பசுமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அகற்ற வேண்டிய மரங்களை வேருடன் மாற்று இடங்களுக்கு இடமாற்றம் செய்து நடவு செய்ய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
