கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 06:06 PM

உடுமலை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்; இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், உடுமலை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் உட்கோட்டத் தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார்.
உட்கோட்டச் செயலாளர் செல்லமுத்து, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் வைரமுத்து, சங்கத்தின் கோட்டத்தலைவர் வெங்கிடுசாமி, மாநிலத்தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச்செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில், சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவதுடன், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
மாநில நெடுஞ்சாலை ஆணையத்தைக்கலைத்து, மாநிலத்தின் அனைத்து நெடுஞ்சாலைகளையும் தமிழக அரசே நேரடியாகப் பராமரிக்க வேண்டும்.
நெடுஞ்சாலைகள் பராமரிப்புப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களில் இளைஞர்களைச் சாலைப்பணியாளர்களாக நியமிக்க வேண்டும்.
பணியின்போது உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கருணை அடிப்படையில் விரைந்து பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உட்கோட்டப் பொருளாளர் கருப்புசாமி நன்றி தெரிவித்தார்.
