sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலை - சாக்கடை - சுகாதாரம் - ஆக்கிரமிப்பு தீராத பிரச்னைகள்... தீர்வுக்கு ஏங்கும் மக்கள்

/

சாலை - சாக்கடை - சுகாதாரம் - ஆக்கிரமிப்பு தீராத பிரச்னைகள்... தீர்வுக்கு ஏங்கும் மக்கள்

சாலை - சாக்கடை - சுகாதாரம் - ஆக்கிரமிப்பு தீராத பிரச்னைகள்... தீர்வுக்கு ஏங்கும் மக்கள்

சாலை - சாக்கடை - சுகாதாரம் - ஆக்கிரமிப்பு தீராத பிரச்னைகள்... தீர்வுக்கு ஏங்கும் மக்கள்


ADDED : ஜூன் 07, 2025 12:39 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் 44வது வார்டில், தாராபுரம் ரோடு - காங்கயம் ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட் வீதி,கே.எஸ்.சி., ஸ்கூல் வீதி, பழனியம்மாள் பள்ளி வீதி, அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் வீதி, பூ மார்க்கெட் உள்ளிட்டவை பிரதான பகுதிகளாக உள்ளன. மாநகராட்சியின் பிரதான வார்டாக இதைக் குறிப்பிடலாம்.

திறந்த நிலை கால்வாய்


கோட்டை மாரியம்மன் கோவில் முன்புறம் வளைவில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் 'சிலாப்' போடாமல் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது; யாரேனும் விழுந்து விடும் அபாயம் உள்ளது.

டிமாண்ட் சந்து இரண்டாவது வீதியில் சிமென்ட் சாலை சேதமாகி குழியாகியுள்ளது. கால்வாய் அருகே ஏற்பட்ட குழியில் வாகன ஓட்டிகள் விழுந்து விடாமல் இருக்க, தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும்.

செல்லப்பபுரம் பரிதாபம்


வார்டில் செல்லப்பபுரம் பகுதியின் நிலை பரிதாபமாக உள்ளது. மாநகராட்சி மூலம் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை குப்பையில் வீசப்பட்டுள்ளது. பாதையை ஆக்கிரமித்து கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. செல்லப்பபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்புறம் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, பணி முடிக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளதால், விரைவில் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தினசரி மார்க்கெட் செல்லும் சாலை, அதியமான் வீதி குண்டும் குழியுமாக உள்ளது. ரோடு அமைக்கப்பட்டதுடன் சரி; அதன் பின் பராமரிப்பு ஐந்து ஆண்டுகளாக இல்லை.

சரிந்த தரைப்பாலம்


திருப்பூர் நகராட்சியாக இருக்கும் போது கட்டப்பட்ட அதே சாக்கடை கால்வாய்களே ராஜ வீதியில் உள்ளது. கால்வாய் உயர்த்திக்கட்ட வழியில்லாததால், 30 ஆண்டுகளாக இதே நிலை தொடர்கிறது. ராஜ வீதியிலாவது கால்வாய் உயரம் தான் குறைவாக உள்ளது. ஆனால், கே.எஸ்.சி., ஸ்கூல் வீதி - தாராபுரம் ரோடு சந்திப்பில் இருந்த மழைநீர் வடிகால் கால்வாய் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது.

கால்வாய் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அருகே, குப்புசாமிபுரம் இரண்டாவது வீதியில் தரைப்பாலம் சரிந்து விட்டதால், மழை பெய்யும் போது மழைநீர் வழிந்தோட வழியில்லாத நிலை உள்ளது. தாராபுரம் ரோடு, மாகாளியம்மன் கோவில் முன்புறம் வெள்ளநீர் பெருக்கெடுக்கிறது.

சுகாதாரம் கேள்விக்குறி


டூம்லைட் மைதானம் ரவுண்டானா சந்திப்பில் சிறிய பூங்கா உள்ளது. பூங்காவை சுற்றி வாகனங்கள், கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. பூங்கா திறக்கப்படுவதில்லை. சாலையிலேயே கார்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

வாகனங்கள் ஆக்கிரமிப்பால், இப்பகுதியில் பூங்கா இருப்பதும், இந்த வார்டு குடியிருப்புவாசிகள் பலருக்கு தெரியவில்லை. டூவீலர்கள் மட்டுமே சென்று திரும்பக்கூடிய வகையில் சந்து, குறுக்கு வீதிகள் நிறையஉள்ளன; மக்கள் அடர்த்தி (30 ஆயிரம் பேர்) அதிகமாக உள்ள வார்டு; ஆனால், சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

குப்பை அகற்றம் சவால்


பெருமாள் கோவில் வீதி பின்புறம் துவங்கி, மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, கால்நடை மருத்துவமனை முன்புறம் ரோட்டோர கடை இரவில் அமைக்கப்படுகிறது. உணவுக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், கோவில் வீதியில் அப்படியே வீசியெறிந்து செல்கின்றனர். வார்டில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால், குப்பை அகற்றுவது பெரும் சவாலான பணியாக உள்ளது.

கற்கள் சீரமைக்கப்படுமா?


மாநகராட்சியின் முதல் ஸ்மார்ட் சிட்டி சாலை அரிசிக்கடை வீதியில் தான் அமைக்கப்பட்டது.ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், 'சிலாப்'கள் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து, குழியாக துவங்கியுள்ளது.

மழை பெய்து, மழைநீர் கற்கள் இடைவெளிக்குள் புகுந்தால், சாலையின் அடுத்தடுத்த பகுதிகளும் சேதமடைய வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு, ஸ்மார்ட் சிட்டி சாலையில் பெயர்ந்துள்ள கற்களை சீரமைக்க வேண்டும்.

'தேரோடும் வீதியில் புதைவட மின்கம்பி அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக நிறுவப்பட்ட 'சுவிட்ச் பாக்ஸ்' சேதமடைந்த நிலையில் உள்ளது. மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால், மின்சாரம் பாய்ந்து விடும் ஆபத்தான நிலை நிலவுகிறது.

தண்ணீர் வீண்


மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், காமராஜர் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் ஓராண்டாக வீணாகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் சரிசெய்யாததால், சாலை குழியாகி விட்டது.

மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே தினமும் லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இருப்பினும் பிரதானசாலை சீரமைக்கப்படாமலே உள்ளது.

பழனியம்மாள் பள்ளி முன் வேகத்தடை, பாதாள சாக்கடை மூடி சேதமாகியுள்ளது; அறியாமல் வருபவர்கள் விழுந்து விடு கின்றனர்.

ஸ்மார்ட்சிட்டி சாலைகள் சேதமானால், அப்படியே விட்டு விடாமல், அவ்வப்போது 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.

பஞ்சமில்லா ஆக்கிரமிப்பு

கே.எஸ்.சி., ஸ்கூல் வீதி, பூ மார்க்கெட் வீதி ஆகிய இரண்டும் குறுகிய சந்திப்பு சாலைகள். ஒரு வழிப்பாதை போல் வாகனங்கள் செல்ல வழி உள்ளது. ஆனால், இரண்டு புறமும் இருந்து வாகனங்கள் விதிமீறி பயணித்து முட்டி மோதிக் கொள்கின்றன. பள்ளி விடும் நேரம், 'பீக் ஹவர்' நேரங்களில் நெரிசல் ஏற்பட்டால், அரைமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பூ மார்க்கெட்டில் இருபுறமும், தள்ளுவண்டி கடை ரோட்டோர ஆக்கிரமிப்பு சகஜமாக உள் ளது. வாகனங்களும் தாறுமாறாக நிறுத்துவதால், எளிதில் இவ்விரு சாலைகளையும் வாகன ஓட்டி கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

மார்க்கெட் வீதியில் செல்ல எதற்கு தடை?

தினசரி மார்க்கெட் டெண்டர் விவகாரம் ஓயாமல், மாநகராட்சி - வியாபாரிகள் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. இதனால், தினசரி மார்க்கெட் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.

பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 5,000 பேர் மத்திய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பிரதான வழியாக, தினசரி மார்க்கெட் வீதி இருந்தது. மார்க்கெட் திறப்பதில் தாமதம் தொடர்வதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகளை வீதியில் அனுமதிப்பதில்லை. ''மார்க்கெட்டை எப்போதோ திறந்து கொள்ளுங்கள்; வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சென்று வர வழிவிடுங்கள்'' என்கின்றனர், அப்பகுதி குடியிருப்பு வாசிகள்.






      Dinamalar
      Follow us