/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழித்தடம் மாற்றி இயக்கம்.. கூடுதல் கட்டணம்! ' மினி' பஸ்கள் மீது 'மெகா' குற்றச்சாட்டு
/
வழித்தடம் மாற்றி இயக்கம்.. கூடுதல் கட்டணம்! ' மினி' பஸ்கள் மீது 'மெகா' குற்றச்சாட்டு
வழித்தடம் மாற்றி இயக்கம்.. கூடுதல் கட்டணம்! ' மினி' பஸ்கள் மீது 'மெகா' குற்றச்சாட்டு
வழித்தடம் மாற்றி இயக்கம்.. கூடுதல் கட்டணம்! ' மினி' பஸ்கள் மீது 'மெகா' குற்றச்சாட்டு
ADDED : ஏப் 02, 2025 07:13 AM

திருப்பூர், : திருப்பூரில் மினி பஸ்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் தொடர்ந்தும், நடவடிக்கையோ பூஜ்ஜியமாக உள்ளது.
மினி பஸ்கள் பயணம் துவங்கும் இடம் பஸ் ஸ்டாண்டாகவோ, பஸ் ஸ்டாப்பாகவோ இருந்தாலும், பயணம் நிறைவு பெறும் இடம் அரசு பஸ்கள் பயணத்தை துவங்காத இடமாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
வெள்ளியங்காடு, கோல்டன் நகர், வஞ்சி நகர், பவானி நகர் உள்ளிட்ட சில வழித்தடங்கள் அவ்வாறு இருந்தாலும், டவுன் பஸ்கள் செல்லும் ஊருக்கு (மங்கலம், வஞ்சிபாளையம், புதிய பஸ் ஸ்டாண்ட்) போர்டு போட்டு இயங்கும் மினி பஸ்கள் திருப்பூரில் உள்ளன.
'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், கலெக் ஷன் இருக்கும் என்பதால் வழித்தடத்தில் இயங்கும் பஸ்கள், மற்ற நேரங்களில் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல், டவுன் பஸ்கள் சென்று திரும்பும் மெயின் ரோட்டில் செல்கின்றன. வழித்தடத்தை மாற்றி, விதிமீறி பயணிக்கும் பஸ்கள் மீது ஆர்.டி.ஓ., நடவடிக்கை எடுப்பதில்லை.
வார இறுதி நாட்களில் கோவில் வழி, புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்ட்டுக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில் இருந்து மற்றொரு பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு மினி பஸ்களுக்கு வழித்தட அனுமதியே இல்லை. ஆனால், இயக்கப்படுகின்றன.
அதிக கட்டணம் வசூல்
வட்டார போக்குவரத்து துறை விதிகளின் படி, மினி பஸ்கள் குறைந்தபட்ச கட்டணமாக, நான்கு ரூபாய், அதிகபட்சமாக எட்டு ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், இரவில் இயங்கும் மினி பஸ்களில், குறைந்த பட்ச கட்டணமாக, பத்து முதல், 20 ரூபாயாக உள்ளது. இதுபற்றி பயணிகள் யாராவது கேட்டால், 'நைட் சர்வீஸ் என்றாலே, டபுள் சார்ஜ் தெரியாதா' என்று நடத்துனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மினி பஸ்கள் கூடுதல் கட்டணம் குறித்து பயணிகள் புகார் தெரிவிப்பதில்லை. எனவே, எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளும் கைவிரித்து விடுகின்றனர். இரவில் அனுமதியில்லாமல், அனுமதிக்காத வழித்தடத்தில் இயங்கும் மினிபஸ்கள் ஏதேனும் விபத்தில் சிக்கும் போதுதான் பிரச்னை வெளியில் தெரிகிறது.
தாறுமாறாக நிறுத்தம்
திருப்பூர், பல்லடம் ரோட்டில் எல்.ஆர்.ஜி., கல்லுாரி முன் மினிபஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. டவுன் பஸ்களை காட்டிலும் கூடுதல் கலெக் ஷன் அள்ள வேண்டும் என்ற நோக்கில், கல்லுாரி பாடவேளை முடியும் முன்னரே, கல்லுாரி கேட் முன் வந்து மினிபஸ்களை நிறுத்தி விடுகின்றனர். 15 நிமிடத்துக்கு மேலாக ஸ்டாப்பில் பஸ்கள் நின்றாலும், வட்டார போக்குவரத்து துறையினர், போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.
போக்குவரத்து கழகம் மாணவியர் வசதிக்காக இரண்டு டவுன்பஸ்களை அனுப்பி வைப்பதற்கு, இருப்பினும், மாணவியர் எண்ணிக்கை, 3,000 அதிகமாக இருப்பதால், போதியதாக இல்லை. இதை மினிபஸ் டிரைவர், நடத்துனர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மதியம், 3:05 க்கு கல்லுாரி முடிகிறது என்றால், மங்கலம் ரோட்டில் குமரன் கல்லுாரி முன், 2:50 மணிக்கே மினிபஸ்கள் வந்து விடுகிறது. இருக்கை நிரம்பி, பஸ் முழுதும் கூட்டம் ஏறும் வரை காத்திருந்த மாணவியரை அழைத்துச் செல்கின்றன.