/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.2.68 கோடி ஒதுக்கீடு; விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.2.68 கோடி ஒதுக்கீடு; விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு
சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.2.68 கோடி ஒதுக்கீடு; விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு
சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.2.68 கோடி ஒதுக்கீடு; விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : ஜூன் 04, 2025 08:50 PM
உடுமலை; மடத்துக்குளம் வட்டாரத்தில், 335 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க, ரூ. 2. 68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
மடத்துக்குளம் வட்டார, தோட்டக்கலை உதவி இயக்குனர் உமா சங்கரி கூறியதாவது:
பயிர் சாகுபடியில், நீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றங்களினால் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, நுண்ணீர்ப் பாசனம் சிறந்த முறையாகும்.
நடப்பு ஆண்டு மடத்துக்குளம் வட்டாரத்தில், 335 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.2.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து பயிர்களுக்கும், குறிப்பாக தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
சொட்டு நீர் பாசனம் அமைக்க, சிறு குறு விவசாயிகளுக்கு, காய்கறி பயிர்களுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 855 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
மற்ற விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, ஒரு லட்சத்து, 5 ஆயிரத்து, 530 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
நுண்ணீர்ப்பாசனம் அமைக்க, தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட ஏதேனும், ஒரு நுண்ணீர் பாசன நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே அரசு மானியத்தில் சொட்டு நீர் அமைத்துள்ள விவசாயிகள், ஏழு ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், தற்போது புதிதாக நுண்ணீர் பாசனம் அமைத்து மானியம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பாசன வசதி இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன கட்டமைப்பு அமைக்க, துணை நிலை நீர் மேலாண்மை பணிகளுக்கும் தோட்டகலைத்துறை வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்பு செட் ஆகியவை அமைக்க, ரூ.15 ஆயிரம், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்ல, நீர்ப்பாசன குழாய் அமைக்க, ஒரு ஹெக்டேருக்கு, ரூ.10 ஆயிரம், நீர் சேமிப்பு கட்டமைப்பு நிறுவுவதற்கு, ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம் 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
காரத்தொழுவு, பாப்பான்குளம், துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர், கணியூர், மெட்ராத்தி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர், தாமோதரன், 96598 38787 என்ற எண்ணிலும், குமரலிங்கம், சங்கராமநல்லுார், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, ஜோத்தம்பட்டி, கண்ணாடிபுத்தூர் விவசாயிகள் உதவி தோட்டகலை அலுவலர் பூவிகாதேவி 80720 09226 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், https://tnhorticulture.tn.gov.in:8080 / என்ற இணையதளத்தில் நேரடியாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.