ADDED : அக் 02, 2024 06:37 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 85 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய, தமிழக அரசிதழில் விவரம் வெளியிடப்பட்டது.
திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகள் இணைக்கப்படுமென, உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது.
மாநகராட்சியை சுற்றியுள்ள, 12 ஊராட்சிகளை மட்டும் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, 159.35 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள மாநகராட்சி, இனி, 302.87 சதுர கி.மீ., அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
திருமுருகன்பூண்டி நகராட்சியை இணைப்பது குறித்து தகவல் இல்லை; திருப்பூர், அவிநாசி, பல்லடம், பொங்கலுார் மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்களில் இருந்து, 12 ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்பட உள்ளது.
ஊத்துக்குளி தாலுகா - அக்ரஹார பெரியபாளையம் மற்றும் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி, அவிநாசி தாலுகா - கணியாம்பூண்டி, பழங்கரை ஊராட்சிகள், திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகா - முதலிபாளையம், இடுவாய், மங்கலம், காளிபாளையம், பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், பொங்குபாளையம் ஊராட்சிகள். பொங்கலுார் ஒன்றியம் - நாச்சிபாளையம், பல்லடம் தாலுகா - கரைப்புதுார் என, 12 ஊராட்சிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பல்லடம் நகராட்சியுடன், ஆறுமுத்தாம்பாளையம், மாணிக்காபுரம், வடுகபாளையம்புதுார் ஊராட்சிகள் இணைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பல்லடத்தை சேர்ந்த நாகூர் மீரான் என்பவர், கேள்வி எழுப்பியிருந்தார்.
ஊரகவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன், 'கிராம ஊராட்சியை, நகராட்சியுடன் இணைப்பது, அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது,' என்று தெரிவித்துள்ளார்.

