ADDED : ஜூன் 19, 2026 03:15 AM

உடுமலை: உடுமலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க, போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களது பல்வேறு பணிகளுக்கு, பொது போக்குவரத்துகளையே பயன்படுத்துகின்றனர். இதில், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து பிரதானமாக இருந்து வருகிறது.
மேலும், கிராமங்களிலிருந்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பெண்கள், முதியோர், வேலைக்கு செல்வோர், மொபசல், டவுன் பஸ்களிலேயே செல்கின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.
ஆனால், கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், பஸ்சுக்காக நீண்ட நேரம் கால்கடுக்க மக்கள் காத்திருக்க வேண்டியதுள்ளது. மேலும் இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டு, பாதுகாப்பற்ற முறையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
