/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக வளர்ச்சித்துறை குடியிருப்புகள் பாழ்
/
ஊரக வளர்ச்சித்துறை குடியிருப்புகள் பாழ்
ADDED : ஏப் 28, 2025 05:58 AM

திருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் குடியிருப்புகளும், திருப்பூரில் உள்ளன.
ஒன்றிய அலுவலகம், கோர்ட் வீதியில் இயங்குகிறது; அங்குள்ள அதிகாரிகளுக்கான அரசு குடியிருப்புகள், ராயபுரம் பகுதியில் உள்ளன.
ராயபுரம் மெயின் ரோட்டின் தென்புறம், இரண்டு பி.டி.ஓ., குடியிருப்புகள் இருந்ததில் ஒன்றை இடித்துவிட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கான குடியிருப்பு கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
மற்ற கட்டடங்கள் பெரும்பாலும் பழுதாகி, பாழடைந்த நிலையில் உள்ளன. மெயின் ரோட்டின் வடபுறம் உள்ள ஆறு குடியிருப்புகளில், ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மிகவும் பழுதாகியிருந்த ஒரு குடியிருப்பு ஏற்கனவே இடிக்கப்பட்டது.
மிகவும் பழுதான நிலையில் உள்ள குடியிருப்புகளை பராமரிப்பு செய்யவோ, பாதுகாக்கவோ, ஊரக வளர்ச்சித்துறையில் நடவடிக்கை இல்லை. அரசு அதிகாரிகளுக்காக கட்டிய கட்டடங்கள், நகரின் மத்திய பகுதியில் வீணாகி கிடக்கின்றன.
குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, சுற்றுச்சுவர் கட்டி பாதுகாக்கப்பட வேண்டும்.
பராமரிக்கும் நிலையில் இல்லை என்றால், அவற்றை இடித்துவிட்டு, புதிய திட்டத்தில் குடியிருப்புகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் எதிர்பார்ப்பு.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,'ஒரே ஒரு குடியிருப்பு மட்டும் பயன்பாட்டில் உள்ளது; மற்றவை சிதிலமடைந்துள்ளது; பராமரிப்பு பணி மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.