/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சபரிமலை சீசன்: தேங்காய் விலை அதிகரிப்பு
/
சபரிமலை சீசன்: தேங்காய் விலை அதிகரிப்பு
ADDED : நவ 25, 2024 11:07 PM
திருப்பூர்; தென்னை சாகுபடியை பொறுத்தவரை, ஆண்டுக்கு எட்டு முறை, தேங்காய் அறுவடை நடந்து வருகிறது. விளைச்சல் நன்றாக இருந்தால், ஒரு மரத்தில் இருந்து, 150 காய்கள் வரை கிடைக்கும்; ஒரு ஏக்கருக்கு, 10 ஆயிரத்து 500 தேங்காய்கள் கிடைக்கும்; குறைந்தபட்சம், 10 ஆயிரம் தேங்காய் கிடைக்கும்.
கடந்தாண்டு மழை குறைவு என்பதால், இந்தாண்டில், திருப்பூர் மாவட்ட பகுதிகளில், ஒரு மரத்துக்கு, 120 காய் மட்டுமே கிடைத்துள்ளது. வழக்கத்தை விட வரத்து குறைந்துவிட்ட நிலையில், சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால், தேவைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு விலையும் உயர்ந்துள்ளது.
தேங்காய் வியாபாரத்தில், அதிகபட்சமாக, டன்னுக்கு, 47 ஆயிரம் ரூபாய் வரை மட்டும் விலை கிடைத்துள்ளது. அதிகபட்ச விலை உயர்வு ஏற்பட்டாலும், ஒரு மாத இடைவெளியில் மீண்டும் குறைந்து இயல்புநிலைக்கு வந்துவிடும். தேங்காய் வர்த்தகத்தில் முதன்முறையாக, ஒரு டன் 55 ஆயிரம் ரூபாய் என்ற நிலை எட்டப்பட்டுள்ளது; இது, மேலும் சில மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை என்கின்றனர் தேங்காய் வியாபாரிகள்.
உடுக்கம்பாளையத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் தேங்காய், நாடு முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. பொள்ளாச்சி தேங்காய்க்கு, ஆந்திராவில் அதிகபட்ச வரவேற்பு இருக்கும். இருப்பினும், ஆந்திர மக்கள் எதிர்பார்க்கும் தரத்துடன் (அதிக எடையுடன்) இந்தாண்டு தேங்காய் இல்லை.
சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அதிக அளவு தேங்காய் செல்கிறது. வரத்து வெகுவாக குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால், வரலாறு காணாத விலை கிடைத்துள்ளது. அதாவது, 500 கிராம் எடையுள்ள தேங்காய், கிலோ 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த எடையுடன் இல்லாத காய்களுக்கு, அதற்கேற்ப விலை கிடைக்கிறது.
தென்னை விவசாயிகளுக்கு, ஒரு காய்க்கு, 18 முதல் 20 ரூபாய் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாகவே, மார்கழி மாதத்தில் தேங்காய் வரத்து குறையும்; அதற்கு பிறகு, மாசி மாதம் பிறக்கும் போது தேங்காய் வரத்து துவங்கும்; அதுவரை, இதே விலை நீடிக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.