/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு அவசியம்
/
பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு அவசியம்
ADDED : பிப் 04, 2025 07:36 AM

பல்லடம்; பழநி தைப்பூச விழாவில், ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். வரும் 12ம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தைப்பூச விழாவில் பங்கேற்று முருகனை வழிபடுவது வழக்கம்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர், பல்லடம்-, தாராபுரம் நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். பாதயாத்திரை பக்தர்கள் செல்ல வசதியாக, நெடுஞ்சாலையில் போதிய முன்னேற்பாடுகள் இன்னும் செய்யப்படாமல் உள்ளன.
பல்லடம் - -தாராபுரம் ரோடு, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின், வாகனங்கள் இந்த வழித்தடத்தில் அசுர வேகத்தில் வந்து செல்கின்றன. இது, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ரோட்டோரத்தில், சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளும், செடி கொடிகள், முட்புதர்கள் மண்டி உள்ளன. இதனால், பக்தர்கள் ரோட்டுக்கு வருவதால் விபத்து அபாயம் உள்ளது.
வெளிச்சமின்மையை போக்க தேவையான இடங்களில் தெரு விளக்குகள், பக்தர்களின் வசதிக்காக கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும் என, முருக பக்தர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர்.
விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, நடைபாதைகளில் உள்ள முட்புதர்கள், செடி கொடிகளை அகற்றுவதுடன், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், அபாய வளைவு பகுதிகளில், வேக தடுப்புகள் வைக்க வேண்டியதும் கட்டாயமாகிறது.