/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சலகெருது ஆட்டம் ; எங்கூரு ஜல்லிக்கட்டு ! பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
/
சலகெருது ஆட்டம் ; எங்கூரு ஜல்லிக்கட்டு ! பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
சலகெருது ஆட்டம் ; எங்கூரு ஜல்லிக்கட்டு ! பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
சலகெருது ஆட்டம் ; எங்கூரு ஜல்லிக்கட்டு ! பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 14, 2025 09:21 PM

உடுமலை:
மார்கழி மாதத்தில், சிறப்பு விருந்தினராக அழைத்து வரப்படும் சலகெருதுகளை, பொங்கல் வைத்து வழிபாடு செய்து, வழியனுப்பும் பாரம்பரிய விழா, உடுமலை பகுதி கிராமங்களில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆநிரைகள் எனப்படும் கால்நடைகளே மதிப்பு மிக்க சொத்தாக முற்காலத்தில் கருதப்பட்டது. இத்தகைய கால்நடைகளுக்கு சிறப்பு செய்யும் வகையில், பொங்கல் பண்டிகையும், அதையொட்டி கொண்டாட்டங்களும் ஏற்பட்டது.
அவ்வகையில், உடுமலை வட்டாரத்தில், சலகெருது மறித்தல் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய விழாவாக இன்றளவும் பின்பற்றப்படுகிறது. தைப்பொங்கல் நாளில், பசுக்கள் ஈன்றெடுக்கும் காளை கன்றுகள் ஆண்டவனுக்குரியது என கருதுகின்றனர். அந்த கன்றுகளை சலகெருதாக தேர்வு செய்து பராமரிக்கின்றனர்.
மூக்காணங்கயிறு பொருத்தாமல், சுதந்திரமாக வளரும் இந்த சலகெருதுகளை, மார்கழி மாதத்தில் ஆடப்பழக்குகின்றனர். ஆட்டக்காரர், இரு மூங்கில் குச்சிகளுடன் உறுமி இசைக்கேற்ப ஆடிச்செல்லும் போது, சலகெருதுகள் அவர்களை தொடர்ந்து செல்வது கண்கொள்ளாகாட்சியாகும்.
நடைமுறை சிக்கல்களால், தற்போது சலகெருதுகளை, மேய்ச்சலுக்கு மலைவாழ் கிராம மக்களிடம் ஒப்படைக்கின்றனர். மார்கழி மாதம் துவங்கியதும், சலகெருதுகளை பொங்கல் விழாவுக்கான தங்கள் கிராம விருந்தினராக அழைத்து வருகின்றனர்.
மார்கழி மாத இரவுகளில் சலகெருது ஆட்டம் ஆடி மகிழ்ந்து, பொங்கலன்று, சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். வீடுதோறும் சலகெருதுகளை அழைத்து வந்து, பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர்.
அதன்பின், அருகிலுள்ள ஆல்கொண்டமால் கோவில்; சல்லிவீரய்யன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அனைத்து கிராம சலகெருதுகளையும் அழைத்து சென்று பூஜைகள் நடக்கிறது.
பொங்கலுக்கு பிறகு, பால் எடுத்தல் விழா நடத்தி, சலகெருதுகளை மீண்டும் மேய்ச்சலுக்கு மலை கிராமங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பொங்கல்தோறும், தங்கள் கிராம விருந்தினராக சலகெருதுகளை அழைத்து வந்து, பொங்கல் வைத்து சிறப்பு செய்து பராமரிக்கும் பாரம்பரியம், இப்பகுதியின் ஜல்லிக்கட்டாக கருதப்படுகிறது.