/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை குறைந்தது: எலுமிச்சை விலை சரிவு
/
விற்பனை குறைந்தது: எலுமிச்சை விலை சரிவு
ADDED : டிச 18, 2025 08:03 AM
திருப்பூர்: மேகமூட்டம், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக எலுமிச்சை விற்பனை குறைந்துள்ளதால், விலையும் குறைந்துள்ளது. ஒரு மாதமாக கிலோ, 80 ரூபாய்க்கு விற்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆடி மாதம் எலுமிச்சை விலை உயர்ந்து கிலோ, 150 - 180 ரூபாய்க்கு விற்றது. ஒரு எலுமிச்சை, ஆறு முதல் எட்டு ரூபாய் வரை விற்பனையானது. விலை உயர்வு புரட்டாசி வரை தொடர்ந்தால், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வெயில் குறைந்தது, புயல், மழை என வானிலை மாற்றத்தால், ஐப்பசி மாதம் விற்பனை குறைந்தது. ஒரு கிலோ, 120 ரூபாய்க்கு எலுமிச்சை விற்றது.
கார்த்திகை மாதம் துவங்கியது முதல் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலிலும் வெயில் குறைந்து, மேகமூட்டமாக மாறியுள்ளது. இருபது நாட்களுக்கு மேலாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை பதிவு ஆவதால், ஜூஸ் கடைகளுக்கு எலுமிச்சை விற்பனை மந்தமாகியுள்ளது.
உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனை குறைந்து எலுமிச்சை தேக்கம் அடைவதால், கிலோ, 80 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு பழம், நான்கு முதல் ஐந்து ரூபாயாகியுள்ளது. ஒரு மாதமாக கிலோ, 80 ரூபாய்க்கு எலுமிச்சை விற்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

