தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.ஏ.பி., கால்வாயில் உயிர் நீர் திறந்து காப்பாற்றுங்க!கருகும் தென்னை மரங்களால் கவலை

பி.ஏ.பி., கால்வாயில் உயிர் நீர் திறந்து காப்பாற்றுங்க!கருகும் தென்னை மரங்களால் கவலை

பி.ஏ.பி., கால்வாயில் உயிர் நீர் திறந்து காப்பாற்றுங்க!கருகும் தென்னை மரங்களால் கவலை


UPDATED : செப் 28, 2026 05:55 PM

ADDED : செப் 28, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 05:55 PM ADDED : செப் 28, 2026 04:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: பருவமழை பெய்யாமல், நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளதால், பி.ஏ.பி., ஆயக்கட்டு பகுதியில் பல லட்சம் தென்னை மரங்களை காப்பாற்றுவது கேள்விக்குறியாகியுள்ளது; கிளை, பகிர்மான கால்வாய்கள் பராமரிப்பை துரிதப்படுத்தி, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து, தீர்வு காண வேண்டும் என பாசன சபையினர் வலியுறுத்தியுள்ளனர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, ஆக., மாதத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

இதற்காக தொகுப்பு அணைகளில் இருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற்று இருப்பு செய்யப்படும். இந்தாண்டு இதுவரை தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் பெறப்படவில்லை.

வால்பாறை மலைத்தொடரில் மழைப்பொழிவு குறைவால், சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளுக்கு எதிர்பார்த்த நீர்வரத்து கிடைக்கவில்லை. தற்போது அணையிலுள்ள கொள்ளளவு நீரை, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு பெற வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில், இது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

வாட்டும் வறட்சி பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 90 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பு பாசன வசதி பெறுகிறது. மழை மறைவு பகுதியான ஆயக்கட்டில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது.

நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வரும், பல லட்சம் தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக ஆயிரம் அடிக்கும் அதிகமான ஆழத்தில் அமைக்கப்பட்ட போர்வெல்களும் விவசாயிகளுக்கு கைகொடுக்கவில்லை.

பாசன காலம், இரு மாதங்கள் தள்ளி போயுள்ளது. இதனால், கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகி விட்டது.

எனவே, திருமூர்த்தி அணையிலிருந்து உடனடியாக உயிர் தண்ணீர் திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், பாசன பகுதிகளிலுள்ள பகிர்மான கால்வாய்கள் துார்வாருவது உள்ளிட்ட பணிகள், அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உடனடி தேவை விருகல்பட்டி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது: பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் பயன்பெறும் குடிமங்கலம் வட்டாரத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. சில கிராமங்களில் தண்ணீரின்றி தென்னை மரங்கள் காய்ந்து விட்டன.

வாழ்வாதாரத்தை விவசாயிகள் இழந்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

இதற்காக கிளை கால்வாய் பராமரிப்பு, பகிர்மான கால்வாய் துார்வாரும் பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும். வறட்சியை கருத்தில் கொண்டு, அதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்குவது அவசியமாகும்.

இவ்வாறு, தெரிவித்தார்.

அரசாணை வந்த பின் பணி நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., இரண்டாம் மண்டலத்துக்குரிய கால்வாய்கள் துார்வாரும் பணிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்டதும், அனைத்து பணிகளும் துவங்கும். மழைப்பொழிவு அடிப்படையிலேயே தண்ணீர் திறப்பு குறித்து தீர்மானிக்கப்படும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us