/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்
/
மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்
ADDED : அக் 18, 2024 06:44 AM
வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் ஏற்பட்டால், நீச்சல் தெரிந்தோர் சுயமாக முன்வந்து மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர், தீயணைப்பு துறையினர்.
வடகிழக்கு பருவம் துவங்கியநிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. பேரிடர் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய மீட்பு பணிகள் குறித்து, தீயணைப்பு துறையினர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
உபகரணம் நம் வசம்
தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் வீரராஜ் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழைக்காலத்தில், மக்களையும் கால்நடைகளையும் பாதுகாக்க, தீயணைப்பு துறையினர் ஆயத்தமாக உள்ளனர். மரம், கான்கிரீட் வெட்டும் கருவி, ரப்பர் படகு, லைப் ஜாக்கெட் என மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறையினர் வசம் உள்ளன.
படகுகள் தயார்
நம் மாவட்டத்தில் மட்டுமின்றி, தேவைப்பட்டால் தமிழகத்தின் எந்த மாவட்டத்துக்கும் மீட்பு பணிக்கு செல்ல, ஒன்பது நிலையங்களிலும் வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். உடுமலை மற்றும் திருப்பூர் வடக்கில் தலா ஒரு ரப்பர் படகு உள்ளது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் உள்ள ரப்பர் படகு, இன்ஜின் பொருத்தி விசை படகு போன்று பயன்படுத்தமுடியும்.
திடீரென அதிக மழைபெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, மக்கள், தீயணைப்பு துறையினர் வரும்வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. மரம் முறிந்து விழுவது, சாலை துண்டிப்பு என பல்வேறு இடையூறுகளை கடந்து, சம்பவ இடத்தை தீயணைப்பு துறையினர் அடைவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காப்பாற்றுவதே முக்கியம்
உயிர் காக்கும் நேரம் தவறிவிடுவதாலேயே உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. பேரிடர் காலங்களில், எத்தனை வேகமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறோமோ, அந்தளவு மனித உயிர்களை காப்பாற்றமுடியும். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், நீச்சல் தெரிந்தவர்கள், உடனடியாக தன்னை சுற்றியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
தண்ணீரில் தத்தளிப்பவரை எச்சரிக்கையாக கையாள வேண்டும். நேருக்கு நேர் சென்று காப்பாற்ற முயற்சிக்க கூடாது. உயிர் பயத்தில், மீட்க சென்றவரையும் நீரில் மூழ்கடித்துவிடும் அபாயம் உள்ளது. நீரில் மூழ்குபவரை, பின்புறமாக சென்று, கைகளை கோர்த்து லாவகமாக பிடித்து இழுக்கலாம்; கால்களுக்கு நடுவே தோள்பட்டையால் உந்தித்தள்ளி, கரை சேர்க்கலாம்.
எளிதாக உபகரணங்கள்
வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி, மீட்பு உபகரணங்கள் தயாரிக்கலாம். தெர்மாகோல்களை ஒட்டியும், காலி பிளாஸ்டிக் குடங்கள், 20 லி., காலி தண்ணீர் கேன்களை கம்பின் இருபுறமும் கட்டியும், டியூப்பில் காற்றை நிரம்பியும் மிதவை உருவாக்கலாம். அதில், நீச்சல் தெரிந்தவர்கள், நீரில் சிக்கியவர்களை மிதவையில் வைத்து, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லலாம்.
'மொபைல்' பயன்படுத்தாதீர்கள்
இடி, மின்னலின்போது வெளிப்புறங்களில் மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். குழந்தைகளை மின் கம்பங்களுக்கு அருகில் செல்லவிடக்கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டிப்போடக்கூடாது.
பாதுகாப்பாகவெடியுங்கள்
மழை ஒருபுறமிருக்க, தீபாவளி பண்டிகையும் நெருங்குகிறது; பண்டிகை கால பாதுகாப்பு மிகவும் அவசியம். பட்டாசு ரகங்களை மிகவும் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். சங்கு சக்கரம், கம்பி மத்தாப்பு, புஸ்வாணம் போன்றவற்றை வாகனங்களுக்கு அருகில் பற்றவைக்க கூடாது. பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் இவ்வாறு அவர்கூறினார்.