/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண்துறை திட்டத்தின் பெயரில் மோசடி விசாரணை வளையத்தில் 'பலே' கில்லாடிகள்
/
வேளாண்துறை திட்டத்தின் பெயரில் மோசடி விசாரணை வளையத்தில் 'பலே' கில்லாடிகள்
வேளாண்துறை திட்டத்தின் பெயரில் மோசடி விசாரணை வளையத்தில் 'பலே' கில்லாடிகள்
வேளாண்துறை திட்டத்தின் பெயரில் மோசடி விசாரணை வளையத்தில் 'பலே' கில்லாடிகள்
ADDED : ஜூலை 13, 2025 12:49 AM
திருப்பூர் : வேளாண் துறையின் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் பெயரில், விவசாயிகளிடம் பெரும் தொகை மோசடி செய்த புகாரில், போலீசார் மற்றும் விசாரணை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகள் மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் துறை சார்பில் மத்திய, மாநில அரசு திட்டங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு ஏராளமான இலவச மற்றும் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளை தொடர்பு கொள்ளும் நபர், தன்னை வேளாண் துறையின் மத்திய அரசு திட்டத்தை கவனிக்கும் அலுவலர் என அறிமுகம் செய்து கொண்டு, 'தங்களுக்கு நிலம் உள்ளதா, எந்த பஞ்சாயத்தில் நிலம் இருக்கிறது, எத்தனை ஏக்கர் இருக்கிறது, யார் பெயரில் இருக்கிறது' என்பது போன்ற அனைத்து விவரங்களையும் கேட்டு தெளிவுப்படுத்தி கொள்கின்றனர்.
'இரண்டரை ஏக்கரில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விவசாயிகள், தங்களின் பங்களிப்பு தொகையாக, 9,100 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகைக்கு ஈடாக, 40 கிலோ மக்காச்சோள விதை, 9 வகையான உரம், 'நானோ' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் திரவ உயிர் உரம், 20 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றை வழங்கி விடுவோம். 5 ஏக்கருக்கு பயன்பெற வேண்டுமானால், 18,200 ரூபாய் செலுத்த வேண்டும்,' என, திட்டம் குறித்து விளக்குகின்றனர்.
'செலுத்தும் பங்களிப்பு தொகையை எங்கள் வங்கிக்கணக்கில் தான் செலுத்த வேண்டும்; நாங்கள் தான் இணையத்தின் வாயிலாக பெயர் பதிவு செய்வோம். ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், சர்வே எண், மொபைல் போன் எண் ஆகியவற்றை வழங்க வேண்டும். தொகை செலுத்திய அடுத்த இரு நாளில், 2.5 ஏக்கருக்கு, 54 ஆயிரத்து 500 ரூபாய்; 5 ஏக்கருக்கு, ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்' என, விவசாயிகள் நம்பும் வகையில் பேசுகின்றனர்.
இதனை நம்பி, ஏராளமான விவசாயிகள் அந்த நபரின் வங்கிக்கணக்கிற்கு, தொகையை செலுத்திய பின், அந்த நபரை தொடர்பு கொள்ளவே முடிவதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். தொடர் புகாரின் அடிப்படையில், ஈரோடு மாவட்ட வேளண் துறை மற்றும் போலீசாரிடம் சிலர் புகார் வழங்கியதன் அடிப்படையில் விசாரணை துவங்கியுள்ளது. இந்த விவகாரத்தில், பலர் விசாரணை வளையத்தில் உள்ளதாக தெரிகிறது.