/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு திட்டம்; அடிப்படை விபரங்கள் சமர்ப்பிப்பு
/
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு திட்டம்; அடிப்படை விபரங்கள் சமர்ப்பிப்பு
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு திட்டம்; அடிப்படை விபரங்கள் சமர்ப்பிப்பு
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு திட்டம்; அடிப்படை விபரங்கள் சமர்ப்பிப்பு
ADDED : டிச 09, 2024 11:00 PM
உடுமலை; நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணையும் ஊராட்சிகள் குறித்து, அடிப்படை விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை ஒட்டி அமைந்துள்ள, கிராம ஊராட்சிகள், எதிர்கால நலன் கருதி, நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட உள்ளன.
அதன் அடிப்படையில், உடுமலை நகராட்சியுடன், நகராட்சிக்கு அருகிலுள்ள, பெரியகோட்டை, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் ஆகிய ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல், மடத்துக்குளம் தாலுகா, கணியூர் பேரூராட்சியுடன், ஜோத்தம்பட்டி ஊராட்சியை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டு, வருவாய் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாயிலாக, இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் இருந்து, அவசர சுற்றறிக்கை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நகர உள்ளாட்சிகளுடன் இணையும், ஊராட்சிகளின் அடிப்படை புள்ளிவிபரங்களை, 29ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டதையடுத்து, பி.டி.ஓ., மற்றும் மண்டல துணை பி.டி.ஓ., கள் அடங்கிய குழுவினர், விபரங்களை சேகரித்து ஆன்லைன் வாயிலாக சமர்ப்பித்துள்ளனர்.
அதிகாரிகள் கூறியதாவது: ஊராட்சிகளின், 2011ம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் தற்போது மக்கள் தொகை விபரம் பெறப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படும் விபரங்களை கேட்டு, ஒருங்கிணைத்து வழங்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளின் மொத்த பரப்பளவு, வேளாண் சாகுபடி விபரங்கள், ஏற்கனவே நகர உள்ளாட்சி அமைப்புகளின் எல்லையில் அமைந்துள்ள விபரம், நகர உள்ளாட்சி எல்லைக்கும், கிராம ஊராட்சி எல்லைக்கும் இடையேயான இடைவெளி; ஊராட்சிகள் தொடர்பான பிரத்யேக சிறப்பு குறிப்புகளும் கேட்டு பெறப்பட்டுள்ளது.
ஆன்லைன் படிவத்தில், இணைக்கப்பட உள்ள நகர உள்ளாட்சியின் பெயர், அமைந்துள்ள ஒன்றியத்தின் பெயர், ஊராட்சியின் பெயர், 2011 மற்றும் 2024ம் ஆண்டு மக்கள் தொகை, பரப்பளவு, வீடுகளின் எண்ணிக்கை, வரி இனங்கள் விபரம், வேளாண் நிலங்களின் பரப்பளவு போன்ற விபரங்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை நகராட்சி மற்றும் கணியூர் பேரூராட்சி உட்பட, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன், 25 கிராம ஊராட்சிகளின் அடிப்படை விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இணைப்பு பணிகள் துவங்கியிருந்தாலும், ஒரு சில பகுதிகளில், ஊராட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊரக உள்ளாட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம், டிச., ல் முடிந்த பிறகு, இப்பணிகள் முழு வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.