/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பப்பாளி சாகுபடியை அதிகரிக்க திட்டம்: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கல்
/
பப்பாளி சாகுபடியை அதிகரிக்க திட்டம்: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கல்
பப்பாளி சாகுபடியை அதிகரிக்க திட்டம்: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கல்
பப்பாளி சாகுபடியை அதிகரிக்க திட்டம்: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கல்
ADDED : ஜன 19, 2024 11:38 PM

உடுமலை:மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் பப்பாளி சாகுபடி மேற்கொள்ள, நாற்றுக்கள் மற்றும் இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில், தோட்டக்கலை பயிர்களான, காய்கறிகள், பழவகைகள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறைந்த செலவு, குறைந்த சாகுபடி காலம், குறைவான நீர்த்தேவை, கூடுதல் வருவாய் உள்ளிட்ட காரணங்களினால், பப்பாளி சாகுபடியை விவசாயிகள் தேர்வு செய்கின்றனர்.
இதில், நாட்டு பப்பாளியில், சுவையும், சத்தும் அதிகளவு உள்ளதால், வணிக ரீதியாகவும், ஏற்றுமதிக்கும், ஒட்டுரக பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. மடத்துக்குளம் வட்டாரத்தில், 'ரெட் லேடி' ரக பப்பாளி அதிகளவு விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சாகுபடி முறை
ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் பப்பாளி சாகுபடி செய்ய ஏற்ற மாதங்களாகும். சட்டிக்கலப்பை வாயிலாக, 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும், தொடர்ந்து, டில்லர் வாயிலாக, உழவு செய்து, 10 நாட்கள் நிலத்தை நன்கு காய விடவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு, 900 முதல் ஆயிரம் பப்பாளி நாற்றுகள் தேவைப்படும்.
நடவு செய்யும் போது, 6 அடி இடைவெளியில், ஒரு கனஅடி அளவுக்கு குழி எடுத்து, ஒவ்வொரு குழியிலும், ஒரு கிலோ நுண்ணுயிர் கலவையை இட்டு நிரப்பி, அதற்கு பின் நடவு செய்ய வேண்டும்.
நேரடி பாசனத்தை விட சொட்டுநீர் பாசனம் சிறந்தது ஆகும். 8ம் மாதம் முதல் காய் அறுவடைக்கு வந்துவிடும்; தொடர்ந்து, 14 மாதங்கள் மகசூல் கொடுக்கும்.
பப்பாளியை அதிகம் தாக்கி சேதப்படுத்துவது மாவுப்பூச்சிகளாகும். ஒட்டுண்ணிகள் விடுவதன் வாயிலாக இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
மரங்களில் உள்ள பப்பாளி காய்கள் முகம் பழுக்கும் தருணத்தில், காய்களைப் பறிக்கத்தொடங்க வேண்டும்.
வியாபாரிகள் தோட்டத்திற்கு வந்து சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பப்பாளி பழங்களை எடைபோட்டு வாங்கிக் கொள்கின்றனர்.
நடப்பாண்டு, தேசிய தோட்டக்கலை இயக்கம் வாயிலாக பப்பாளி புதிதாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரெட்லேடி பப்பாளி நாற்றுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
இந்த வருடத்தில், 5 ஏக்கருக்கு சங்கரராமநல்லுாரில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பப்பாளி நாற்றுகள் வழங்கப்படும்.
ஒரு ஏக்கருக்கு, 400 பப்பாளி நாற்றுகளுடன், இயற்கை இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, 5 ஏக்கருக்கு, 2 ஆயிரம் பப்பாளி நாற்றுக்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கு, 46 ஆயிரத்து, 200 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார் புகைப்படம் ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு துங்காவி உள் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் திரு தாமோதரன், 96598 38787 என்ற எண்ணிலும், மடத்துக்குளம் உள் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.