/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளின் சுகாதாரம்; நோய்க்கு அச்சாரம்
/
பள்ளிகளின் சுகாதாரம்; நோய்க்கு அச்சாரம்
ADDED : ஏப் 02, 2025 07:44 PM

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் மட்டுமே, 30 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 186 துவக்கப்பள்ளிகள், 46 அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
உடுமலை சுற்றுப்பகுதியில், 90 சதவீத அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை பயன்படுத்துவதில் தான் சிக்கல் நிலவுகிறது. கழிப்பறைகளின் சுத்தம் கேள்விக்குறியாக உள்ளது.
ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக கிராமங்களிலும், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சி பள்ளிகளிலும், துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கான ஊதியம் மிக குறைவாகவே உள்ளது.
இதனால், பள்ளி கழிப்பறைகளை பெயரளவில் மட்டுமே சுத்தம் செய்கின்றனர். பெரும்பாலான நாட்கள் சுத்தம் செய்வதில்லை. சில பள்ளிகளில், ஆசிரியர்களின் சொந்த முயற்சியால், துாய்மை பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கி, தொடர்ச்சியாக பள்ளிக்கு வர அழைக்கின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், குறிப்பாக நகரப்பள்ளிகளில் மூன்று, நான்கு பள்ளிகளுக்கு ஒரு துாய்மை பணியாளர் வீதம் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். பணிச்சுமையால் அவர்களும் கழிப்பறைகளை பெயரளவில் மட்டுமே சுத்தம் செய்கின்றனர்.
உடுமலை ஏரிப்பாளையம் நகராட்சி துவக்கப்பள்ளியின், கழிப்பறை அருகே குப்பைக்கழிவுகள், புதர் மண்டி இருப்பதால் அடிக்கடி விஷப்பூச்சிகள் வருகின்றன. இதேபோல், சில அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டமைப்புகளை சரி செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது.
சிங்கப்பூர் நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில், வகுப்பறை கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மாணவர்கள் அச்சத்துடன் அமர்ந்து கல்வி கற்கின்றனர். இதற்கெல்லாம் தீர்வு கிடைத்தால் அரசு பள்ளிகளும் ஜொலிக்கும்.

