/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைமுறைகளுக்கு ஏற்ற அறிவியல் சிந்தனைகள்
/
தலைமுறைகளுக்கு ஏற்ற அறிவியல் சிந்தனைகள்
ADDED : ஜூலை 27, 2025 07:21 AM
ஒ ரு நிகழ்ச்சியில், 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கலாம் குறித்து பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
இந்திய விண்வெளித் துறையில் இருந்த கலாம், அதைவிட்டு பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக்கு சென்றபோது, 1982-ல் நான் விண்வெளித்துறைக்குள் சென்றேன். ஒருமுறை அறிவியலாளர்களுக்குப் பயிற்சி நடந்தது. அங்கு வந்த கலாம், எங்களுடன் உரையாடினார்.
கார்கில் போர் பற்றி கேள்வி எழுப்பினர்; அருகில் வந்த கலாம், என் கண்களைப் பார்த்தபடி, ''எந்தவொரு தருணத்திலும் பிரச்னைகள் வரலாம். அதை நாம் பிரச்னையாகப் பார்க்காமல், நமக்கு கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாக நினைத்து, தீர்வுகாண முயல வேண்டும்'' என்றார்.
எந்த பள்ளியிலும் நான் கற்றிராததை முதல் சந்திப்பிலேயே கலாமிடமிருந்து கற்றேன். அதுதான் என்னை இன்றைக்கும் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. 2008, அக். 22-ல் 'சந்திரயான் - 1' விண்ணில் ஏவப்பட்டது. அன்றைக்கு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கலாம் வரவில்லை. சந்திரயான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, ஒருநாள் கலாம் என்னை அழைத்து, 'எப்போது அங்கு வந்து பார்க்கலாம்?' என்று வினா எழுப்பினார்.
நான், ''நவம்பர் 14 அன்று வாருங்கள்; அன்றுதான் உங்கள் 'பேபி' நிலவில் இறங்கவிருக்கிறது'' என்றேன்.
'எனது பேபியா?' என்று கேட்டார் கலாம். 'ஆமாம்; சந்திரயானில் அனுப்பிய நிலவுமோதுகலன் உங்கள் சிந்தனையில் உருவானது. அதனால் அது உங்கள் பேபி'' என்றேன். மகிழ்ச்சி ததும்ப புன்னகைத்தார்.
சந்திராயன் உருவாகிக்கொண்டிருக்கும்போதே கலாம், குடியரசுத் தலைவராகிவிட்டார். ஆனபோதும் எங்களது ஆராய்ச்சிப் பணிகளுக்கு நல்ல பல ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கினார். கலாமின் அறிவியல் சிந்தனைகள் எல்லா தலைமுறைகளுக்கும் ஏற்றதாகவே அமைந்துள்ளன.