/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: போலீசார் 'அட்வைஸ்'
/
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: போலீசார் 'அட்வைஸ்'
ADDED : மே 18, 2025 12:46 AM
அவிநாசி : தமிழகத்தில் தொடர்ந்து தனியாக இருக்கும் தம்பதியினர், தோட்டத்து வீட்டில் இருக்கும் முதியவர்கள் என குறி வைத்து கொலை செய்து கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு போலீசார் தொடர்ந்து முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், அவிநாசி போலீசார் வெளியிட்ட அறிவிப்பு:
அவிநாசி போலீஸ் எல்லையில் உள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதிகள், தோட்டத்து வீடுகள் ஆகிய பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை நடக்காமல் இருக்க பொதுமக்கள் கிராம பகுதிகளில் கட்டாயம் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல் வேண்டும்.
பொதுமக்கள் தாமாக முன்வந்து தனியாக பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடு இருக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவித்து அடையாளம் காட்ட வேண்டும்.
வெளியூர் செல்லும் போது போலீசாரிடம் தகவல் கொடுத்து விட்டு செல்லவும். விலை உயர்ந்த பொருட்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றை பாதுகாப்பாக வங்கிகளிலோ தங்களது பாதுகாப்பிலோ வைத்துக்கொள்ள வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களை பொதுமக்கள் தங்கள் வீட்டினுள் அனுமதிக்க கூடாது. பகல் நேரங்களில் வரும் வியாபாரிகள், தரகர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுத்து வீட்டின் நிலையை தெரிவிக்க கூடாது.
பொதுமக்கள், அவிநாசி ஸ்டேஷன் -- 9498101328, டி.எஸ்.பி., ஆபீஸ் - -9498101321, இன்ஸ்பெக்டர் - - 9498174273 மற்றும் எஸ்.ஐ.,க்கள் - 90035 75869, 94981 78487 ஆகிய எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.