/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதுகாப்பு கேள்விக்குறி! தள்ளுமுள்ளு இல்லாத நாளில்லை.. ரயில் பயணிகள் நிலை பரிதாபம்
/
பாதுகாப்பு கேள்விக்குறி! தள்ளுமுள்ளு இல்லாத நாளில்லை.. ரயில் பயணிகள் நிலை பரிதாபம்
பாதுகாப்பு கேள்விக்குறி! தள்ளுமுள்ளு இல்லாத நாளில்லை.. ரயில் பயணிகள் நிலை பரிதாபம்
பாதுகாப்பு கேள்விக்குறி! தள்ளுமுள்ளு இல்லாத நாளில்லை.. ரயில் பயணிகள் நிலை பரிதாபம்
ADDED : பிப் 17, 2025 11:45 PM

நேற்று மதிய வேளை. ஆலப்புழா - தன்பாத் பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் ரயில் நிலையம் இரண்டாவது பிளாட்பார்முக்கு வருகிறது.
முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் ஏற 600க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருக்கின்றனர்.
முன்பதிவு செய்து காத்திருந்தவர்களோ, 200க்கும் மேற்பட்டோர்.
பிளாட்பார்மில் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பயணிகளின் தலைகளாகத் தென்படுகின்றன.
ரயில் வந்தவுடன் ஒரே நேரத்தில் முட்டிமோதி பெட்டிகளுக்குள் ஏறிச்செல்ல முயற்சிக்கின்றனர். தங்களது உடைமைகளை பெட்டியின் ஜன்னல் வழியே திணிக்கின்றனர்.
பெண்கள் பலர் தள்ளுமுள்ளுவில் சிக்கி ரயிலில் ஏற வேண்டியிருந்தது.
முதியவர்கள், குழந்தைகளுடன் வந்த பெற்றோரின் நிலைமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் அனுதினமும் நடைபெறும் காட்சிகளில் இது ஒரு 'சாம்பிள்' மட்டும்தான்.
தினமும் 5000 பயணிகள்
இதுபோன்று, திருப்பூரை கடந்து வடமாநிலம் செல்லும் ரயில்களில் ஏறி பயணிக்க, தினமும், 5,000 பயணிகள் வருகின்றனர். இவர்களை பாதுகாப்பாக வழியனுப்பி வைக்க, பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார், 50 பேர் கூட இல்லாத சூழல் உள்ளது.
பெண் போலீஸ் குறைவு
திருப்பூரில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு பயணிகள் பயணிக்கின்றனர். இரண்டு எஸ்.ஐ.,கள் தலைமையில், ஆறு ஏட்டுகள், 21 போலீசார் மட்டுமே ரயில்வே போலீசில் உள்ளனர்; இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படவில்லை.
ரயில்வே பாதுகாப்பு படையை பொறுத்தவரை ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்.ஐ., உட்பட, 14 அதிகாரிகள் உள்ளனர். ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் சேர்த்து மொத்த எண்ணிக்கை, 50ஐ கூட நெருங்கவில்லை. பெண் போலீசாரின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் வகையிலே உள்ளது.
ஜங்ஷன் இல்லையாம்
''திருப்பூருக்கு ஜங்ஷன் அந்தஸ்து இல்லை. ஸ்டேஷன் அந்தஸ்தில் தான் உள்ளது. இதனால், ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை'' என்கின்றனர், ரயில்வே அதிகாரிகள்.
அதிகாரிகளே,உணர்வீர்களா?
பின்னலாடைத்துறை வளர்ச்சியால், வடமாநில பயணிகள் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி வருகிறது. அதற்கேற்ற வகையில், ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினரை கூடுதலாக நியமிப்பது அவசியம் என்பதை போலீஸ் உயர் அதிகாரிகள், ரயில்வே உயர் அலுவலர்கள் உணர வேண்டும்.
- நமது நிருபர் -