ADDED : மார் 18, 2024 12:25 AM
பதற்றமான ஓட்டு சாவடி உள்ளிட்ட மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைக்காக, ஸ்டேஷன் வாரியாக ஓட்டுச் சாவடி விபரங்களை உளவு பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டுசாவடி மையங்கள் குறித்து போலீசார் விபரங்கள் சேகரித்து வருகின்றனர்.
பதற்றமான ஓட்டுசாவடி மையங்களை நேரில் சென்று ஸ்டேஷன் வாரியாக நுண்ணறிவு பிரிவு, தனிப்பிரிவு போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.
பதற்றமான மையங்களின் தற்போதைய நிலை, கூடுதலாக மேற் கொள்ள வேண்டிய வசதிகள், போலீஸ் பாதுகாப்பு என, அனைத்தையும் பட்டியலிட்டு வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பதற்றமான ஓட்டுசாவடி மையம் விபரங்கள் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மையத்திலும் நேரில் ஆய்வு செய்யப்பட்டு, மையத்தின் தற்போதைய நிலை என்ன, அங்கு மேற்கொள்ள வேண்டிய புனரமைப்பு பணி, வசதிகள், மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு என, அனைத்தும் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்ட பின், உயரதிகாரிகள், தேர்தல் அலுவலர்களுடன் கலந்து ஆலோசனை செய்ய உள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மத்திய பாதுகாப்பு படை
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இன்னும் சில நாட்களில் வர உள்ளனர். அவர்களை தங்க வைக்க பள்ளி, கல்லுாரி, திருமண மண்டபங்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

