/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரும்பு சாகுபடியில் நாற்று நடவு முறையால் மகசூல் அதிகரிக்கும்! கரணையில் இருந்து விவசாயிகள் மாற்றம்
/
கரும்பு சாகுபடியில் நாற்று நடவு முறையால் மகசூல் அதிகரிக்கும்! கரணையில் இருந்து விவசாயிகள் மாற்றம்
கரும்பு சாகுபடியில் நாற்று நடவு முறையால் மகசூல் அதிகரிக்கும்! கரணையில் இருந்து விவசாயிகள் மாற்றம்
கரும்பு சாகுபடியில் நாற்று நடவு முறையால் மகசூல் அதிகரிக்கும்! கரணையில் இருந்து விவசாயிகள் மாற்றம்
ADDED : அக் 24, 2025 06:12 AM

உடுமலை: கரும்பு சாகுபடியில், கரணை தேர்வு செய்து நடவு செய்து வந்த நிலையில், தற்போது வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நாற்றுப்பண்ணைகளில் ஒரு மாதம் வரை வளர்ந்த கரும்பு நாற்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உடுமலை பகுதிகளில் கரும்பு சாகுபடி பிரதானமாக உள்ளது. உடுமலை ஏழு குளம் பாசன நிலங்கள், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் இறவை பாசன நிலங்களில், ஏறத்தாழ, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கிருஷ்ணாபுரத்திலுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு, உடுமலை, மடத்துக்குளம், பழநி என பல்வேறு பகுதிகளில் அதிகளவு கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
அதோடு, விவசாயிகள் நேரடியாக, கிரசர் தொழிற்சாலைகள் அமைத்து, நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இப்பகுதிகளிலுள்ள மண் வளம், நீர் வளம் மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக, கரும்பு சாகுபடி பிரதானமாக உள்ளதோடு, மற்ற பகுதிகளை விட, அதிக வளர்ச்சி, பிழிதிறன் என கரும்பு உற்பத்தியில் சிறந்த பகுதியாக உள்ளது.
கரும்பு விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி, கரும்பிலிருந்து கரணை வெட்டி, வயல்களில் பார் அமைத்து, நிலங்களில் இதனை பதித்து, கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.
வேளாண்மையில் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, தென்னை, காய்கறி பயிர்களுக்கு நாற்றுப்பண்ணைகள் உள்ளது போல், தற்போது கரும்பிற்கும் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக, நாற்று உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு, மடத்துக்குளம் பாப்பான்குளத்தில் கரும்பு நாற்று உற்பத்தி பண்ணையில், கரும்பு நாற்றுக்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக, ஒரே சீரான வளர்ச்சி, அதிக மகசூல், சாகுபடி காலம் குறைவு, பராமரிப்பு செலவினம் குறைவு உள்ளிட்ட பல்வேறு பயன்கள் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வெளி மாநிலங்களுக்கு வினியோகம் கரும்பு நாற்றுப்பண்ணை உரிமையாளர் ரமேஷ்குமார் கூறியதாவது: விவசாயிகள் தரமான கரும்பு தேர்வு செய்து, கரணை வெட்டி, அதற்கு பின் நடவு செய்ய வேண்டும். இதில், முளைப்பு திறன் குறைவு, புளிப்புத்தன்மை என ஏராளமான சிக்கல்கள் ஏற்படுகிறது.
தற்போது, கரும்பு நாற்றுப்பண்ணையில், நாற்றாக உற்பத்தி செய்து தருகிறோம். மத்திய அரசின் கரும்பு ஆராய்ச்சி மையத்திலிருந்து தேர்வு செய்த ரக கரும்புகள் வாங்கி, நடவு செய்து, கரணை மற்றும் விதை தயார் செய்கிறோம்.
அதற்கு பின், விதை நேர்த்தி செய்து, குழித்தட்டுக்களில், தென்னை நார் கொண்டு, நாற்றாக உற்பத்தி செய்து, தொடர்ந்து நிழல் வலையில், 30 முதல், 40 நாட்கள் வரை வளர்த்தி, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு, 7 ஆயிரம் நாற்றுக்கள் வரை தேவைப்படும்; ஒரு நாற்று, ரூ. 2.60 க்கு வழங்குவதோடு, நேரடியாக விவசாய நிலங்களுக்கு சென்று, அங்கு நடவு முறைகளுடன் விளக்குகிறோம்.
இதன் வாயிலாக, உரிய இடைவெளியுடன், அதிக துார்களுடன் கரும்பு விளைச்சல் இருக்கிறது. ஒரு மாதம் கவனமாக பராமரிக்க வேண்டிய சூழல் மற்றும் செலவு குறைவதோடு, ஒரே சீரான, அதிக துார்களுடன் கரும்பு வளர்ச்சி இருக்கும்.
11 மாதங்களில் பயனுக்கு வருதோடு, சராசரியாக, 100 முதல், 130 டன் வரை மகசூல் கிடைக்கிறது. அதோடு, அடுத்தடுத்த ஆண்டுகளில், 4 முதல 5 ஆண்டுகள் கட்டை கரும்பு சாகுபடியாக பராமரிக்க முடிகிறது.
நாற்றுப்பண்ணையில், 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி திறன் உள்ளது. ஆண்டுக்கு, 70 முதல், 80 லட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்து, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, கரும்பு விவசாயிகள் நாற்று முறையில் சாகுபடி செய்ய, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு, தெரிவித்தார்.

