/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய விலையில் விதைகள், உரங்கள்
/
மானிய விலையில் விதைகள், உரங்கள்
ADDED : ஆக 07, 2025 10:58 PM
உடுமலை; உடுமலை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான சான்று பெற்ற விதைகள் மற்றும் உரங்கள் மானிய விலையில் வினியோகிக்கப்படுகிறது.
உடுமலை பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற முதுமொழிக்கேற்ப தானியங்கள், காய்கறி பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகரித்து, பாசன அணைகளின் நீர் இருப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு காரணமாக, ஆடிப்பட்ட சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது சாகுபடிக்கு தேவையான, விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
உடுமலை வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், சோளம், கம்பு, உளுந்து, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம்,
நுண்ணூட்டச்சத்து, டீ விரிடி, சூடோமோனஸ், திரவ ஜிங்க் சல்பேட் உரம், ஜிப்சம், திரவ ரைசோபியம் ஆகியவை மானிய விலையில் தயாராக உள்ளது.
இதில், மாடுகளுக்கு அடர் பயிர் சாகுபடியாக, தானியம் மற்றும் தட்டு பயன்பாட்டிற்காக, அதிக பயனளிக்கும் சோளம், கம்பு, விதைகள் இருப்பு உள்ளது.
மேலும், தென்னை மற்றும் நிலைப்பயிர்களுக்கு பயன்படுத்த நுண்ணுாட்டம் மானியவிலையில் வினியோகம் செய்யப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள், வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ், 97512 93606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.