/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டிய கலாம்
/
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டிய கலாம்
ADDED : ஜூலை 26, 2024 11:49 PM
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டிய கலாம்
கேரள மாநிலம், பரவூர் கிராமம். 2012ம் ஆண்டு. அறிவியல் பரப்புரை திட்டத்தைத் துவக்குவதற்காக, அங்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்றிருந்தார். மாணவர்கள் எத்துறை சார்ந்தவர்களாக உயர விரும்புகிறார்களோ அதற்கேற்ப பயிற்சி கொடுப்பதே திட்டம்.
'நாட்டை பலப்படுத்த அறிவியல் எப்படி உதவும்?' என்ற தலைப்பில் கலாம் உரையாற்றினார்; மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ஒரேயொரு மாணவன் தயங்கிய வண்ணம், கலாம் அருகில் வந்தான். நீண்ட தொலைவில் உள்ள கிராமத்தில் ஆறாம் வகுப்புப் படிக்கிறான்.
'என்ன கேக்குறதுன்னு தெரியல... ஸ்கூல்ல டீச்சர்ஸ் கிட்ட எந்தக் கேள்வியும் கேட்டது கிடையாது. டீச்சர்ஸ்னாலே எனக்குப் பயம். திறமைசாலியான பசங்களைப் பார்த்தாலும் 'அவங்க மாதிரி ஆக முடியுமா'ன்னு பயம் வந்துடுது. நான் மெரைன் இன்ஜினியர் ஆகணும்னு ஆசைப்படுறேன்... என்ன சார் செய்யணும்?''
மாணவன் கேட்டதும், கலாம் பதிலளிக்கத் துவங்கினார்: ''நிறைய மாணவர்கள் இப்படித்தான் இருக்காங்க... நான் ஒரு பாடம் சொல்லப்போறேன். அதை வரிக்கு வரி அப்படியே திருப்பிச் சொல்லணும். சரியா?''
'நான் பறந்துகொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
நான் வளர்ந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களைச் செயல்படுத்த
நான் வளர்ந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் வளர்ந்தேன் என்னால் முடியும் என்ற
நம்பிக்கையுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டேயிருப்பேன்'
மாணவன் முகத்தில் ஒரு தெளிவு, பூரிப்பு.
'சார், நான் நிச்சயம் மெரைன் இன்ஜினியர் ஆவேன்... எனக்குள் தன்னம்பிக்கை வந்தாச்சு' என்றான் மாணவன்.
'வாழ்க்கையில் தேவைப்படுவது தன்னம்பிக்கை மட்டும்தான்; அது இருந்தால் வெற்றி நிச்சயம்' என்று சொல்கிறார்,- எழுத்தாளர் மார்க் ட்வைன்.
அத்தகைய தன்னம்பிக்கையை லட்சக்கணக்கான மாணவர்களிடம் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார், கலாம்!
-----
கட்டுரை 2
----------
மக்கள் நேசனாக விளங்கியது எப்படி?
“தனி மனிதப் பண்பு, திறன், எதிர்காலம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் உன்னதமான வாழ்க்கைத் தொழில்தான் கற்பித்தல் பணி. ஒரு சிறந்த ஆசிரியர் என மக்கள் என்னை நினைத்தால் அதுதான் எனக்கு மிகப் பெரிய கவுரவம்” என்றார் கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக, அப்துல் கலாம் திகழ்ந்தார். ராஷ்டிரபதி பவனில் பொதுமக்கள் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. ஆனால், கலாம் காலத்தில் இந்த விதிமுறை மாறியது. இவரது சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளும், மாணவர்களும்தான். அவரைச் சந்தித்துவந்த பலர் அவருடன் தொடர்ந்து தொடர்பிலும் இருக்க முடிந்தது. தொலைபேசியில் பேச முடிந்தது. மின்னஞ்சலில் பதில் பெற முடிந்தது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கிய அவர், அரசியல் தலைவர்களை விடவும் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார். காரணம் தேச வளர்ச்சியின் மீதும், எதிர்காலத் தலைமுறை மீதும் அவர் செலுத்திய அக்கறை. நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை எனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினார். தேசத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த வெளிநாடுகளை நம்பி இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், அதற்குப் பதிலாக தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்றம் உயிர்ப்பான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
----------
கட்டுரை 3
குறள் வழி கலாம்
''வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள்'' என்று குறிப்பிடுகிறார் அப்துல் கலாம்.
'அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்'
அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பது இக்குறளின் பொருள். எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது உண்மை.
ராமேஸ்வரம் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் பேசிய கலாம், ''உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான்'' என்று கூறினார்.
தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும் என்று உறுதி படச் சொன்னவர் கலாம். வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும். திருக்குறளைத் துணை கொள்ளுங்கள் என்று கூறிய கலாம், சொல்லில் மட்டுமல்லாமல், செயலிலும் நிஜமாக வாழ்ந்து காட்டினார்.
----
கட்டுரை 4
மாணவன் துவங்கி ஏவுகணை நாயகன் வரை
ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை தொடங்கினார், அப்துல் கலாம். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார். சென்னை எம்.ஐ.டி.,-ல் விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) விமான அபிவிருத்தி பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்துக் கொடுத்தார். பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த குழுவில் ஒரு அங்கமாகவும் இருந்தார்.
ஏவுகணை திட்டம் வெற்றிகரம்
கடந்த 1969-ம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு(ஐ.எஸ்.ஆர்.ஓ.,) மாற்றப்பட்டார். அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுவதற்கான ஏவுகணை தயாரிக்கும்திட்டத்தின் இயக்குனர் ஆனார்.
கடந்த 1980-ல் எஸ்.எல்.வி- ஏவுகணை 'ரோஹிணி' என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் சேர்ந்தது போன்றவை மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. எஸ்.எல்.வி., திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாக கலாம் கூறுவதுண்டு.
கலாம் 1965-ல் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விண்கலத் திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969-ல், அரசு அனுமதி பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
கடந்த 1963-64ல், அவர் நாசாவின் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பீல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான தளம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.
மேலும், 1970க்கும் 1990க்கும் இடையில் உருவாக்கப்பட்டு ஏவப்பட்ட போலார் எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எல்.வி., 3 ஆகிய ஏவுகணை திட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தன.
பொக்ரான் திட்டம்
தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான பொக்ரான் அணுகுண்டு திட்டத்தைக் காண்பதற்காக முனைய எறிகணை ஆய்வகத்தின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். கடந்த 1970-ல், எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோஹிணி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனை. 1970களில், வெற்றிகரமாக ஏவப்பட்ட எஸ்.எல்.வி., திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் தயாரிப்புக்காக டெவில் செயல் திட்டம் மற்றும் வேலியன்ட் செயல் திட்டத்தை இயக்கினார்.
அப்துல் கலாமின் ஏவுகணை உருவாக்கும் திறமையால் 1980களில், அவரை மத்திய அரசு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க துாண்டியது. கலாம் மற்றும் டாக்டர் வி.எஸ். அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.
'கலாம்ராஜூ ஸ்டென்ட்'
1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு அளித்தார்.
1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' என பெயரிடப்பட்டது. 2012-ல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக வடிவமைத்த டேப்லெட் கணினி 'கலாம்-ராஜூ டேப்லெட்' என்று பெயரிடப்பட்டது.
பிரமோஸ் திட்டம்
'ரோஹிணி' செயற்கைக் கோள் வெற்றிக்குப் பிறகு, ஏவுகணை மேல் ஏவுகணை விட்டு இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றினார் கலாம். ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் அப்துல் கலாம் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட பிரமோஸ் திட்டம்தான் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.
சூப்பர்சானிக் ஏவுகணை (பிரமோஸ்) கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதன் வெற்றியில் முக்கியப் பங்கு அப்துல் கலாமுக்கு இருக்கிறது.
---
கட்டுரை 5
உற்பத்தித்துறை மேம்படுத்த விரும்பிய கலாம்
கண்களை மூடிக் காணும் கனவை, கண்களை திறந்து கொண்டும் காண முடியும் என்று புரிய வைத்தவர் அப்துல் கலாம். அவரது வல்லரசுக் கனவு நனவாகும் நாள் தொலைவில் இல்லை.
இந்தியாவிற்காக அவர் கண்டதும், நம்மைக் காண சொன்னதுமான கனவுகள் மிகப்பெரியது. தேச மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான். இந்தியாவின் வளர்ச்சியை உள்நாட்டு மொத்த வர்த்தகத்தை உயர்த்துவதன் மூலம் சாதிக்க முடியும் என்று கருதினார் கலாம். அதற்கான முயற்சிகள்தான் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
உள்ளூர் சந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நிதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர நிலையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது முதன்மைக் கனவு. மேலைநாடுகளில் இருந்த 'கேட்', 'கேம்' போன்ற இயந்திரவியலின் புதுமைகளை பற்றி கலாம் ஆரம்பத்தில் இருந்தே ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். அவரது சீரிய முயற்சியால் பல கல்லுாரிகளில் இந்த பாடங்கள் இடம்பெற்றன.
உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்றார் கலாம். இன்று 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் அரசு கணித்திருக்கும் அளவுகள் அப்துல் கலாமின் கணிப்புகளுடன் பொருந்துகின்றன.
சிறப்பான சாலைகள் இல்லாதது தான் இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்று கூறினார். அதன்படிதான் அப்போது மத்திய அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தையும், துறைமுகங்களை இணைக்கும் சாலைகளையும் அமைத்தது.
இங்குள்ள தொழில்களையும் அதில் பணிபுரியும் பணியாட்களின் திறனையும் அதிகரிக்க சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும் அதன் மூலம் இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் வல்லமைமிக்க மனித வளத்தை அளிக்க முடியும். இந்த கனவுகளை இந்திய இளைஞர்களால் எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என நம்பியவர் கலாம்.
அவரது 'கனவு இந்தியா' உருவாக வேண்டும். அவர் சொன்ன பாதை உருவாகி கொண்டிருக்கிறது. அவர் கனவு கண்ட தேசத்தை அவருக்காக உருவாக்கி தருவது அவர் நம்பிக்கை வைத்த இளைஞர்களின் கடமை.
----
கட்டுரை 6
அதிகாலை துவங்கி நள்ளிரவு தாண்டியும்
அயராது உழைத்த அப்துல் கலாம்
இறுதிக்காலம் வரை அப்துல் கலாம், கடும் உழைப்பாளியாகத் திகழ்ந்தார். அதிகாலை துவங்கி நள்ளிரவையும் தாண்டி அவர் பணிபுரிந்தார்.
அப்துல் கலாமுக்கு 24 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர், ஹரி செரின்டன். கலாம் குறித்து அவர் கூறிய தகவல்கள்:
கலாம் அதிகாலை 6:30 மணி முதல் பணிகளைத் தொடங்கி விடுவார். இரவு 2:00 மணி வரை அவரது பணிகள் தொடரும். அதற்கு பின்னரே உறங்குவார். தொலைக்காட்சி பார்க்கமாட்டார். ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை விரும்பி கேட்பார். தினமும் அவருக்கு ஏராளமான அழைப்புகள் வரும். கருத்தரங்கில் பேச, விழாக்களில் பங்கு கொள்ள என்று அந்த அழைப்புகள் இருக்கும். அவற்றையெல்லாம் தினமும் பார்த்து விடுவார். கலாம் போன்று, இந்த நாட்டுக்கு ஏராளமான தலைவர்கள் உருவாக வேண்டும்.
கடைசி நிமிடங்கள்
கலாம் இறப்பதற்கு முதல் நாள், ஷில்லாங் புறப்பட்டுச் செல்லும்போது, அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. மாலை 7:00 மணியளவில் ஷில்லாங்கில் உதவியாளர் ஒருவர், என்னை போனில் தொடர்பு கொண்டார். 'சார்... பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு ராணுவ டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்' என்று தெரிவித்தார். நான் பதறிப் போனேன். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் போன் வந்தது. 'சார் இறந்து விட்டார்' என்று சொன்னார். அந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை. அவர் இறந்து விட்டதாகவே நான் உணரவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
---------
கட்டுரை 7
அதிகாலை எழுங்கள்; தோல்வியை விரட்டுங்கள்
ஊக்குவிக்கிறார் கலாம்
அப்துல் கலாம் கூறிய தன்னம்பிக்கை நிறைந்த கருத்துகள் இளைய சமுதாயத்தினருக்குப் பயன் தரும்.
வாழ்வினில் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை. உன் திறமையையும் மற்றும் உள்மன சக்தியையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அளித்து செல்கிறது.
சவாலுக்கே தெரிவியுங்கள்; நீங்களும் ஓர் வீழ்த்த முடியாத ஒரு சவால் ஆனவர்தான் என்று.
வெற்றிக் கதைகளை படிக்காதீர்கள். நீங்கள் செய்திகளை மட்டுமே பெறுவீர்கள். தோல்வி கதைகளை படியுங்கள். வெற்றி பெற சில யோசனைகளை பெறுவீர்கள்.
முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுக்க வேண்டாம். இரண்டாவது வெற்றியில் நீங்கள் தோல்வியுற்றால் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன.
வெற்றியாளர்கள் ஒருபோதும் தோல்வி அடையாதவர்கள் அல்ல. ஆனால் ஒருபோதும் விலகாதவர்கள்.
வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தான் துவங்கும் என்பதால், முதல் முயற்சியில் தோல்வி அடைந்து விடுமோ என்ற பயப்பட வேண்டாம்.
அவமானங்களை பொருட்படுத்தாதீர்கள். ஆனால் ஒரு முறை செய்த தவறை இன்னொரு முறை செய்யாதீர்கள்.
வேலைக்கு நீ தலை வணங்கினால் நீ யாருக்கும் தலைவணங்க வேண்டிய தேவையில்லை. அதுவே நீ வேலைக்கு தலை வணங்காவிட்டால் நீ அனைவரிடமும் தலைகுனிய நேரிடும்.
துாங்கும்போது வருவது கனவல்ல. துாங்க விடாமல் செய்வதே.
அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. பயிற்சி - அனுபவம் எல்லாவற்றையும் விட ஆர்வம்தான் முக்கியம்.
சூரியனாக பிரகாசிக்க ஆசைப்பட்டால் நீ சூரியனாக எரிய வேண்டும். அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ளும்.
--------------------
கட்டுரை 8
காகிதங்கள் அல்ல... எல்லை காக்கும் ஆயுதங்கள்
ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவோர் முதுநிலை பட்டப் படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெறுவது வழக்கம். விஞ்ஞானிகள் என்றாலே முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுவெளியிலும் உண்டு. இதைத் தகர்த்து, இளநிலை பொறியியல் பட்டத்துடன் டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தின் உச்சபட்ச விஞ்ஞானி நிலையை அடைந்த, மரபை மீறிய சாதனையாளர் கலாம்.
விஞ்ஞானிகள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையை வைத்தும், அந்தக் கட்டுரைகள் எத்தனை பேரால் எடுத்தாளப்பட்டிருக்கின்றன என்ற எண்ணிக்கையை வைத்தும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியை மதிப்பிடுவதுண்டு. பயன்பாட்டு ஆராய்ச்சித்தளத்தில் இந்த நடைமுறைகளைத் தாண்டி ஆய்வுக் கட்டுரைகளின் தளத்திலேயே தேங்கிவிடாமல், அறிவியல் படைப்புகளை ஏவுகணைகளாக, ஆயுதங்களாக மாற்றும் அயராத பணியில் இரவு பகலாக பாடுபட்டு வெற்றியும் பெற்றவர் கலாம். அக்னி, பிருத்வி, ஆகாஷ், பிரமோஸ் என அவரது அறிவியல் படைப்புகள் காகிதங்களாக நின்றுவிடாமல், எல்லை காக்கும் ஆயுதங்களாக நின்றுகொண்டிருக்கின்றன.