/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'செல்பி', 'வீடியோ' மோகம்; மங்கும் மனித நேயம்
/
'செல்பி', 'வீடியோ' மோகம்; மங்கும் மனித நேயம்
ADDED : டிச 08, 2024 02:53 AM

காலையில் எழுந்தது முதல் இரவு துாங்கும் வரை தங்களின் அன்றாட நிகழ்வுகளை 'செல்பி' எடுத்து போட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகள், ஷேர்களும் வாங்குவதை நெட்டிசன்கள் பெருமையாக கருதுகின்றனர். ரோட்டில் ஒருவர் துடித்து கொண்டிருந்தாலும் கூட, காப்பாற்ற சிலர் ஓடினாலும், அதை போட்டோ, வீடியோ எடுக்க என, தொட்டதுக்கு எல்லாம் தங்கள் 'ஸ்மார்ட்' போன்களை துாக்கும் இயந்திர மனிதர்களாக மாறி வரும் அவலநிலையில் உள்ளோம்.
இதுபோன்ற செயல்களை பெருமையாக நினைப்பதற்கு பின்னால், கொஞ்சம், கொஞ்மாக மனித நேயம் மங்கி வருவது சமுதாயத்துக்கு பெரும் ஆபத்தான ஒன்று. இந்த அவலநிலை சமுதாயத்தில் படர்ந்து வருகிறது.
சமீபத்தில், திருப்பூர், பாண்டியன் நகரில் வீட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடி, வெடித்த விபத்தில் குழந்தை உட்பட சிலர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர். சுற்று வட்டாரத்தில் குடியிருப்புகள் சேதமடைந்தது. வெடி நடந்த விஷயத்தை அறிந்த பலரும் ஆர்வ கோளாறாக வந்து மொபைல் போனில் வீடியோ, போட்டோ, செல்பி எடுத்து சென்றனர்.
கடந்த வாரம், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டில் கும்பல் ஒன்று, ஒருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு, ஹாயாக எவ்வித அச்சமும் இல்லாமல் நடந்து சென்று காரில் ஏறி தப்பி சென்றனர். இதை சூழ்ந்த மக்கள் அவர்களை தடுக்கவோ என எதையும் செய்யவில்லை. ஆனால், கொலை முயற்சி நடந்த இடத்தில் ரோட்டில் சிதறி கிடந்த ரத்த கோளத்தை மொபைல் போன்களில் போட்டோ பிடித்து கொண்டிருந்தனர்.
அவிநாசியில், மங்கலம் ரோட்டில் காரில் வந்த கும்பல் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் பைனான்ஸியரை வெட்டி சாய்த்தது. அதையும் மக்கள் பலர் வேடிக்கை பார்த்ததோடு, போட்டோ, வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் பதிவு செய்யும் ஆர்வத்தை தான் காட்டி வந்தனர். ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி, நமக்கு நாமே தெரியாமல் நம்முடையை மனித நேயத்தை இழந்து வருவது வேதனையான ஒன்று. உயிருக்கு போராடியவர்களுக்கு உதவிய காலம் போய், வெட்டி கொன்ற இடத்தில் சிதறி கிடக்கும் ரத்தத்தை போட்டோ எடுக்கும் நிலையில் மனிதன் இருப்பது தலை குனிவான செயல் என்பதை அனைவரும் உணர வேண்டும்.