/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்... ஓட்டுப்பதிவு!இன்றும், நாளையும் வீடு தேடிச்செல்லும் அலுவலர்கள்
/
தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்... ஓட்டுப்பதிவு!இன்றும், நாளையும் வீடு தேடிச்செல்லும் அலுவலர்கள்
தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்... ஓட்டுப்பதிவு!இன்றும், நாளையும் வீடு தேடிச்செல்லும் அலுவலர்கள்
தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்... ஓட்டுப்பதிவு!இன்றும், நாளையும் வீடு தேடிச்செல்லும் அலுவலர்கள்
ADDED : ஏப் 04, 2024 11:53 PM

உடுமலை;லோக்சபா தேர்தல் வரும், 19ல் நடக்க உள்ள நிலையில், வீடு தேடிச்செல்லும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களிடம், இன்றும், நாளையும் ஓட்டுப்பதிவு செய்கின்றனர்.
லோக்சபா தேர்தல் வரும், 19ம் தேதி நடக்கிறது. இதற்காக, ஓட்டுச்சாவடிகளை தயார் செய்தல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதிகளில் இருப்பு வைத்தல், ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தும் பொருட்கள் என, அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன், 85 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டுப்பதிவு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டசபை தொகுதி வாரியாக, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாகச்சென்று, வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து, படிவம் '12டி' வழங்கி, அதனை பூர்த்தி செய்து தேர்தல் அலுவலர்கள் வாயிலாக பெறப்பட்டுள்ளது.
இன்று துவக்கம்
அதன் அடிப்படையில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதியில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இன்றும், நாளையும் தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று, ஓட்டுச்சீட்டுக்கள் வழங்கி, ஓட்டுப்பதிவு மேற்கொள்கின்றனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயே., என, 15 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்கும் வகையில், ஓட்டுச்சீட்டு தயார் செய்யப்பட்டு, சட்ட சபை தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை தொகுதியில், 85 வயதிற்கும் மேற்பட்டோர், வீட்டிலிருந்தே ஓட்டளிக்க, 3,184 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், 1,229 பேர் முன் வந்துள்ளனர். இன்றும், நாளையும், அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச்சென்று, தேர்தல் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு மேற்கொள்ள உள்ளனர்.
இதற்காக, தலா, ஒரு மண்டல தேர்தல் அலுவலர், உதவி அலுவலர், மைக்ரோ அப்சர்வர், வீடியோ கிராபர், ஒரு போலீசார் என, 5 பேர் கொண்ட, 21 குழு அமைக்கப்பட்டுள்ளது.
21 குழுக்களுக்கும் தனித்தனியாக வாகனம், ஓட்டுப்பதிவு மேற்கொள்வதற்காக உபகரணங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் தொகுதி
அதே போல், மடத்துக்குளம் தொகுதியில், 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், 305 பேரும், 109 மாற்றுத்திறனாளிகள் என, 414 பேர் விருப்ப படிவம் வழங்கியுள்ளனர். இவர்களிடம் ஓட்டுப்பதிவு மேற்கொள்ள, 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இரு தொகுதியிலும் சேர்ந்து, இரு நாட்களில், 4 ஆயிரத்து, 827 பேர் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.
பல்வேறு அறிவுரைகள்
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ஓட்டுப்பெட்டி எடுத்துச்சென்று, தபால் ஓட்டு பெறவேண்டும். '12டி' படிவம் வழங்கி விட்டு, திடீரென, ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்கிறேன் என வாக்காளர் தெரிவித்தால், அதனை அனுமதிக்க முடியாது.
தபால் ஓட்டு படிவத்தில், ஜெல் பென் பயன்படுத்தக்கூடாது; பால்பாய்ன்ட் பேனா பயன்படுத்தி, விருப்பமான வேட்பாளருக்கு, 'டிக்' செய்ய வேண்டும்.
வாக்காளரின் வீட்டினுள் வைத்து மட்டுமே, ஓட்டளிக்கப்பட வேண்டும். ஒரே வீட்டில் பல நபர்கள் ஓட்டளிக்கக்கூடாது.
வாக்காளரின் வீட்டினுள் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ வேட்பாளர்களின் ஏஜென்டுகளை அனுமதிக்கக்கூடாது. அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் வரலாம்.
ஆனால், உள்ளே அனுமதிக்கக்கூடாது, என இப்பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.

