ஒரே மேடையில் சீனியர்... ஜூனியர் :மடத்துக்குளத்தில் மாற்றம்
ஒரே மேடையில் சீனியர்... ஜூனியர் :மடத்துக்குளத்தில் மாற்றம்
ADDED : ஏப் 03, 2026 05:28 PM

உடுமலை: அ.தி.மு.க., வில், எதிரும், புதிருமாக இயங்கி வந்தவர்களையும், அ.ம.மு.க., சீனியரையும் ஒரே மேடை ஏற்றி, விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது அக்கட்சி தலைமை.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., வாக அ.தி.மு.க., வை சேர்ந்த மகேந்திரன் உள்ளார். இத்தொகுதியை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், அ.ம.மு.க., பெற்று, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சிட்டிங் எம்.எல்.ஏ., மற்றும் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த மகேந்திரனுக்கு சீட் மறுக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, அ.ம.மு.க., வேட்பாளர் சண்முகவேலு, சிட்டிங் எம்.எல்.ஏ., மகேந்திரனை ஒரே மேடையில் ஏற்றி, கூட்டணி வெற்றிதான் முக்கியம் என தொண்டர்களிடையே பேசினார்.
மேலும், அ.ம.மு.க., விலுள்ள சண்முகவேலு, தனக்கும் சீனியர், இங்குள்ள அனைவருக்கும் சீனியர்; எனவே அவரை வெற்றி பெற செய்வது உரிமை, கடமை என பேசினார். அதே போல், மகேந்திரனும் சீனியர் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மேலும், மகேந்திரன், சண்முகவேலுவுடன் இணையாமல் தனியாக வலம் வரும், உடுமலை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., வான ராதாகிருஷ்ணனையும், இந்த கூட்டத்தில் பங்கேற்கச்செய்தார்.
அ.தி.மு.க., வில் எதிரும், புதிருமாக செயல்பட்டவர்கள்; அ.ம.மு.க., சீனியர் என அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துச்சென்றுள்ளார் முன்னாள் அமைச்சர் வேலுமணி.
