/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பெருமைகள் பட்டியலிட்ட செந்தலை கவுதமன்
/
திருப்பூர் பெருமைகள் பட்டியலிட்ட செந்தலை கவுதமன்
ADDED : பிப் 03, 2024 11:51 PM

'திருப்பூர் என்பது, பழைய கற்கால மனிதர் வாழ்ந்த இடம்; கி.மு., 300க்கு முன்பே மனிதர் வாழ்ந்தனர் என்பதை ஆதாரத்துடன், ஆங்கிலேயர் விளக்கியுள்ளனர்,'' என, புலவர் செந்தலை கவுதமன் பேசினார்.
திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நேற்று, 'பெருமைமிகு திருப்பூர் வாழி' என்ற தலைப்பில், புலவர் செந்தலை கவுதமன் பேசியதாவது:
வரலாற்று பெருமை வாய்ந்த திருப்பூர் என்பது, கி.மு., 300க்கு முன்பாகவே மக்கள் வாழ்ந்த இடம் என, ஆங்கிலேயர் கண்டறிந்தனர். நமது பெருமைகளை அவர்கள் தான் கண்டறிந்து கூறினர். திருப்பூர் வரலாற்று புகழ் பெற்ற ஊரா என்ற ஐயம் இன்றும் பலரிடமும் இருக்கிறது.
கி.மு., 300க்கு முன்
ஹரப்பா, சிந்து சமவெளி நாகரிகம் என, வெளிநாட்டு அறிஞர்கள்தான், நமது வரலாற்றை கண்டறிந்தனர். ெஹரான்ஸ் டூவல் என்பவர்தான், திருப்பூர் ரயில்வே பாதைக்கு அருகே, 70 ஏக்கர் பரப்பில் அகழ்வாய்வு நடத்தினார். பழைய கற்கால மனிதர் வாழ்ந்த இடம். உயர் பரல் பருக்கை, கல் திட்டை உள்ள இடம்; கி.மு., 300க்கு முன்பே மனிதர் வாழ்ந்தனர் என்பதை ஆதாரத்துடன் கூறினார்.
புதிய கற்கால மனிதர்
தொல்லியல், அகழ்வாய்வு செய்த பிறகு, புதிய கற்காலத்தில் மனிதர் இருந்ததற்கும், திருப்பூர் -மங்கலம் இடையே சான்று கிடைத்துள்ளது. வரலாற்றுக்கு உரியஊர் திருப்பூர். படை வந்து திரும்பி சென்றதால், திருப்பூர் என்று பெயர் பெற்றது.
திரும்பிய ஊர் திருப்பூர் படைகள் வந்தாலும், நொய்யல் ஆற்றை கடக்க முடியாமல் திரும்பியது; அதனால், இவ்விடம் திருப்பூர் எனப்பட்டது. பதிற்றுப்பத்து பாடலில், கனைக்கால் இரும்பொறைக்கும், சோழன் செங்கண்ணனுக்கும், போர் நடந்த ஊர் என்று திருப்பூர் குறிப்பிடப்படுகிறது.
சேரனும், சோழனும்
சேரன் கடைக்கால் இரும்பொறை தோற்று, கொடுவாய் அருகே சிறையில் அடைக்கப்பட்டான். தற்போதுள்ள எலவந்தி அப்போது, இலவந்திகை எனப்பட்டது; அங்கிருந்த பொய்கையார் என்ற புலவர், சோழனை புகழ்ந்து, 40 பாடல்கள் பாடி; அதற்கு பரிசாக, சிறையில் இருந்த சேரனை விடுவித்தார். வீரவரலாறு பேசும் மண், திருப்பூர் மண். இவ்வாறு, அவர் பேசினார்.