சர்வர் தொடர் பிரச்னையால் ரேஷன் வினியோகம் பாதிப்பு
சர்வர் தொடர் பிரச்னையால் ரேஷன் வினியோகம் பாதிப்பு
ADDED : ஆக 18, 2026 05:10 PM
உடுமலை: சர்வர் பிரச்னையால், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது; பல மணி நேரம் காத்திருந்தும் பொருட்கள் வாங்க முடியாமல், மக்கள் திரும்பிச்செல்லும் நிலைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரேஷன்கார்டுகள் உள்ளன. உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ், ரேஷன்கடைகளில், ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
பொருட்கள் வினியோகம், ரேஷன்கடைகளிலுள்ள ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவி வாயிலாக மேற்கொள்கின்றனர்.
இக்கருவியில், ரேஷன்கார்டு விபரங்களை சரிபார்த்து, பயோமெட்ரிக் விபரங்களை பதிவு செய்து, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை ரேஷன்கடை பணியாளர்கள் வினியோகிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக, கருவியில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், பொருட்களை வினியோகிக்க முடியாமல், ரேஷன் கடை பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
குறிப்பாக, மக்கள் பொருட்கள் வாங்க வரும் காலை, 11:00 மணியில் இருந்து இப்பிரச்னை துவங்கி பல மணி நேரம் நீடிக்கிறது. பல மணி நேரம் காத்திருந்து பொருட்கள் வாங்க முடியாமல், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
ஒரு வாரமாக நீடிக்கும் இப்பிரச்னையால், பணியாளர்களும் பணிகளை முடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இது குறித்து உரிய ஆய்வு செய்து, தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்; ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதித்தால், வினியோக நாட்களை அதிகரிக்க வேண்டும் என மக்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
