/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்க்கப்படாத ஏழு பிரச்னை! 'திஷா' கூட்டத்தில் பட்டியலிட்ட எம்.பி.,: பதிலளிக்க திணறிய அதிகாரிகள்
/
தீர்க்கப்படாத ஏழு பிரச்னை! 'திஷா' கூட்டத்தில் பட்டியலிட்ட எம்.பி.,: பதிலளிக்க திணறிய அதிகாரிகள்
தீர்க்கப்படாத ஏழு பிரச்னை! 'திஷா' கூட்டத்தில் பட்டியலிட்ட எம்.பி.,: பதிலளிக்க திணறிய அதிகாரிகள்
தீர்க்கப்படாத ஏழு பிரச்னை! 'திஷா' கூட்டத்தில் பட்டியலிட்ட எம்.பி.,: பதிலளிக்க திணறிய அதிகாரிகள்
ADDED : ஆக 26, 2025 11:21 PM

திருப்பூர்: பொதுமக்களின் மனுக்கள் மீது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததை குத்திக்காட்டியும், நீண்ட காலமாக தீர்க்கப்படாத ஏழு மனுக்களை விளக்கியும் திஷா கூட்டத்தில், எம்.பி., சுப்பிராயன் பேசினார்.
திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (திஷா), கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலை வகித்தார். கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார், ஈரோடு எம்.பி., பிரகாஷ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமயணியம், மாநகராட்சி கமிஷனர் அமித் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
மொத்தம், 45 அரசு துறை சார்ந்த அதிகாரிகள், தங்கள் துறைகளில் நடைபெற்றுவரும் பணிகளின் நிலை குறித்து பேசினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், குடிநீர் பிரச்னை, தாமத பணிகளை சுட்டிக்காட்டினர். முந்தைய திஷா கூட்டத்தில் எம்.பி.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த அரசு துறையினர் பதிலளித்தனர்.
தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், ''70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, தாயுமானவர் திட்டத்தில், வீடுதேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தில், 21 ஆயிரத்து 321 கார்டுதாரர்கள், இந்த திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர்,'' என்றார்.
கூட்டத்தில், திஷா கமிட்டியின் தலைவர், எம்.பி., சுப்பராயன் பேசியதாவது:
மக்கள் தங்கள் பிரச்னைகள், தேவைகளை, மனுக்களாக முன் வைக்கின்றனர். அந்த மனுக்கள் மீது, காலத்தே தீர்வு காண்பது அவசியம். ஆனால், நடைமுறையில் அது நிறைவேறுவதில்லை. பெரிய தடங்கல்கள் ஏற்படுகின்றன.
அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள், மக்களின் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவேண்டும். என்னிடமே கைவசம் ஏழு பிரச்னைகள் இருக்கின்றன. பிரச்னைகள் உரிய காலத்தில் தீர்க்கப்படவில்லையென்றால், மக்கள் அதிருப்தி அடைகின்றனர்; அந்த அதிருப்தி, அவர்களை தவறான வழிகளை தேட நிர்பந்தித்து விடும்.
தாராபுரத்தில் உபரி நிலத்தை, நீண்ட போராட்டத்துக்கு பின், கோர்ட் வரை சென்று போராடி, பட்டியல் சமூகத்தினர் 45 பேருக்கு பெற்றுக்கொடுத்தோம். தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில், அவர்கள் விதைப்பு பணிகளையும் துவங்கி விட்டனர். சிட்டா அடங்கலில், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு முடிந்து பல ஆண்டுகளாகியும்கூட, வருவாய்த்துறையில் அதனை நீக்கம் செய்ய வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தாராபுரம் தாலுகாவில், விவசாய பயன்பாட்டுக்கான பட்டா கேட்டு மனு அளித்திருந்தனர். 2023ல், டி.ஆர்.ஓ.,வாக இருந்த ஜெய்பீம், உடனடியாக 17 பேரை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. கலெக்டர் நேரடியாக விசாரித்து தீர்வுதரவேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட இரண்டு குடும்பத்தினர். அவர்களுக்கு இந்தியாவிலோ, உலகிலோ எங்கும் வீடோ, நிலமோ இல்லை. அவர்களுக்கு குடியிருப்பதற்காக மூன்று சென்ட் நிலம் வழங்ககோரி கடந்த 2022 முதல் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும், நிலுவையில் உள்ளது.
நஞ்சராயன் குளம் அருகே அரசுக்கு சொந்தமான, 8 ஏக்கர் நிலம், தனியாருக்கு, அறக்கட்டளை என்கிற பெயரில் மாற்றப்பட்டுவிட்டது. சில அதிகாரிகள், அந்த முறைகேடான நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்துள்ளனர் என்பதை உணர முடிகிறது. தனியார் அறக்கட்டளையிடம் உள்ள அந்த அரசு நிலத்தை, மீண்டும் கையகப்படுத்த வேண்டும். இதன்மீது முறையான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு, சுப்பராயன் பேசினார்.
சத்தமா பேசுங்க...
எம்.பி.,க்கள், கலெக்டர், மேயர் ஆகியோரின் கேள்விகளுக்கு, என்ன பதில் சொல்வது என தெரியாமல் சில அரசு அலுவலர்கள் திணறினர். மைக்கை தாழ்வாக வைத்துக்கொண்டு, மெதுவாக பேசினர். சுதாரித்துக்கொண்ட கலெக்டர், 'மைக்கை உயர்த்தி வைத்து பேசுங்கள். மைக்கை உயர்த்தி வைத்தால் மட்டும்போதாது, கொஞ்சம் சத்தமாக பேசுங்கள்; அப்போதுதான் எங்களுக்கு கேட்கும்,' என்றார்.
விழிப்புணர்வு வேண்டும்
கடந்த, 20 நாட்களாக திருப்பூர் மாநகராட்சியில், குப்பை பிரச்னை தலைதுாக்கியுள்ளது. மாநகராட்சி குப்பைகளை, வெளியே எடுத்துச்செல்லும் போது, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, குப்பைகளை தரம் பிரித்து பெற்று, கையாளவேண்டும். உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்கள் தொடர்பாக, அரசு அலுவலர்கள் வீடு வீடாக சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன்பயனாக, முகாம்களில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். அதுபோல், குப்பைகளை தரம்பிரித்து கொடுப்பது தொடர்பாகவும், வீடுவீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். ஒருபுறம், எங்கள் பகுதியில் குப்பை கொட்டாதே என்கின்றனர்; இன்னொருபுறம், குப்பையை எடு என்று மக்கள் பிரச்னை செய்கின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர், குப்பை பிரச்னையை சாதகமாக பயன்படுத்தி, அரசியல் செய்கின்றனர். அதற்கெல்லாம் இடம் கொடுக்க கூடாது.
-அமைச்சர் சாமிநாதன்