/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் பாயும் கழிவுநீர் குடிநீருடனும் கலக்கிறது
/
ரோட்டில் பாயும் கழிவுநீர் குடிநீருடனும் கலக்கிறது
ADDED : அக் 24, 2025 06:17 AM

அவிநாசி:
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அவிநாசி நகராட்சி, 18வது வார்டு பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் சந்தை கடை பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் கால்வாய் முறையாக இல்லாததால் நிரம்பி ரோட்டில் வழிந்து ஓடுகிறது. கால்வாய் ஆழம் குறைவாக உள்ளதோடு, கழிவு நீர் தேங்காமல் செல்லும் வகையிலும் கட்டப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் அப்பகுதி முழுவதும் நிரம்பி குளம் போல் தேங்கி நிற்கிறது.
அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் ஆகியவற்றுக்கு செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நாள் முழுவதும் துர்நாற்றத்துடன், கொசு மற்றும் ஈக்கள் தொந்தரவால் நோய் தொற்றுக்கு ஆளாவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.
அப்பகுதி வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி (அ.தி.மு.க.) கூறியதாவது:
ஈரோடு மெயின் ரோட்டில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் மிகவும் பழுதடைந்து கழிவு நீர் வழிந்து தேங்கி நிற்கிறது. மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள குடிநீர் குழாய் பம்பை சுற்றிலும் கழிவுநீர் மழைக்காலங்களில் மூழ்கடித்து விடுவதால் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து விடுகிறது. பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. நிதி ஒதுக்காமல் நகராட்சி நிர்வாகத்தினர் மெத்தனமாக உள்ளனர்.
---
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், முறையான கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் ரோட்டில் பாய்கிறது.

