/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தையல் தானியங்கிமயம்: ஏற்றுமதியாளர் ஆர்வம்
/
தையல் தானியங்கிமயம்: ஏற்றுமதியாளர் ஆர்வம்
ADDED : பிப் 02, 2025 01:13 AM

திருப்பூர்: திருப்பூர் வந்த மத்திய ஜவுளித்துறை செயலரிடம், ''தையல் இயந்திர ஆட்டோமேஷன் மற்றும் சாயத்தொழில் பிரிவு மேம்பாட்டுக்கு, 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் தொடர்பாக, மத்திய ஜவுளித்துறை செயலர் நீலம் ஷமி ராவ், இயக்குனர் அனில்குமார் ஆகியோர், திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக ஜவுளித்துறை இயக்குனர் லலிதாவுடன் வந்து, பின்னலாடை ஏற்றுமதியாளர்களையும், தொழில் அமைப்பு நிர்வாகிகளையும் சந்தித்தனர்.
நிறுவனங்கள் பார்வை
பெருமாநல்லுார் அருகே உள்ள நேதாஜி அப்பேரல் பார்க் வளாகத்தில் உள்ள, பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி பணிகளை பார்வையிட்டனர். அப்போது, வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தனர். செயற்கை நுாலிழையில் உற்பத்தியான துணிகளுக்கு சாயமிடும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ள, ஸ்ரீவிஷ்ணு கிளாத்திங் நிறுவனத்தை பார்வையிட்டனர்.
பிரத்யேக அரங்கு தேவை
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்த கூட்டத்தில், சங்கத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்து பேசுகையில், ''திருப்பூருக்கு, 'தையல் இயந்திர ஆட்டோமேஷன் மற்றும் சாயம் பிரிவு மேம்பாட்டுக்கு, 50 சதவீத மானியம் வழங்க வேண்டும். சூரியசக்தி உற்பத்திக்கு, 90 சதவீத மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
திருப்பூர் பின்னலாடை துறைக்கு, சர்வதேச கண்காட்சிகளில், பிரத்யேக அரங்கு அமைத்து கொடுக்க வேண்டும். தொழில்துறையினரின், 25 சதவீத நில பங்களிப்புடன், அரசின், 75 சதவீத பங்களிப்புடன் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.
பொதுச்செயலாளர் திருக்குமரன் வரவேற்றார். பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசினார்.
இணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், ''ரஷ்ய ஏற்றுமதி வர்த்தகத்துக்கான வரையறுக்கப்பட்ட வங்கி வசதிகள் அவசியம் வேண்டும். உள்நாட்டு சில்லரை வர்த்தகத்துக்கும், கடன் உத்தரவாத திட்ட அமைப்பை உருவாக்க வேண்டும்.
ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தை திரும்ப பெறுவது குறித்து, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அறிவிப்பு பெற வேண்டும்,'' என்றார்.
சங்க ஆலோசனை குழு உறுப்பினர் சுனில்குமார், உலகளாவிய சந்தையில் செயற்கை நுாலிழை ஆடை வாய்ப்புகள் குறித்து,'பவர்பாயின்ட்' மூலம்விளக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் யோசனைகளை முன்வைத்தார்.
பின்னலாடை துறையினர்
சவால்களுக்கு நிரந்தரத்தீர்வு
மத்திய ஜவுளித்துறை செயலர் நீலம் ஷமி ராவ் பேசியதாவது:
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாக, பல்வேறு தொழில் அமைப்புகள், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். திருப்பூர் கிளஸ்டர் சந்தித்து வரும் சவால்களுக்கு நிரந்த தீர்வு காண்பதில், அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது பாராட்டுக்குரியது. மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு சென்று, திருப்பூர்தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்ய, சாத்தியமான அனைத்து நடவடிக்கையும் எடுத்து, ஒரு நிரந்தர தீர்வு காணப்படும்.
மத்திய அரசின், 'சூர்ய கார்' திட்டத்தின் வாயிலாக, மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த முடியும். தொழிலாளர் துறை செயலருடன் ஆலோசித்து, 'ஆத்ம நிர்பர் பாரத் அபியான்' திட்டத்தில், தொழில் துறையினரின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும். சர்வதேச அளவிலான கண்காட்சிகளில், பின்னலாடை கிளஸ்டருக்கு பிரத்யேக சந்தை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.