அமராவதி ஆற்றில் சட்ட விரோத நீர் திருட்டு ஆய்வில் அதிர்ச்சி!குழாய்களை அகற்றி நடவடிக்கைக்கு உத்தரவு
அமராவதி ஆற்றில் சட்ட விரோத நீர் திருட்டு ஆய்வில் அதிர்ச்சி!குழாய்களை அகற்றி நடவடிக்கைக்கு உத்தரவு
UPDATED : ஜூலை 16, 2026 05:47 PM
ADDED : ஜூலை 16, 2026 05:35 PM
உடுமலை: அமராவதி ஆறு மற்றும் கால்வாய்களிலிருந்து, சட்ட விரோதமாக தொழிற்சாலை பயன்பாட்டிற்கு நீர் திறக்கப்படுவது குறித்து, விவசாயிகள் புகாரை தொடர்ந்து, கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். சட்ட விரோத குழாய்களை உடனடியாக அகற்றவும், கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 29,387 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் என, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அமராவதி அணையில் துவங்கும் ஆறு, 148 கி.மீ., துாரம் பயணம் செய்து, திருமுக்கூடலுார் பகுதியில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.
அமராவதி ஆறு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையாக உள்ளதோடு, கரூர் மாவட்டத்திற்கும் பயன் அளிக்கிறது.
ஆற்றில் சட்ட விரோதமாக நுாற்றுக்கணக்கான குழாய்கள் அமைத்தும், மடத்துக்குளம் முதல் தாராபுரம் வரை, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள, தென்னை நார் தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக நீர் திருடப்பட்டு வருகிறது.
ஆற்றில் நேரடியாக நீர் திருடப்படுவதோடு, விதி மீறி, ஆற்றின் இரு கரைகளுக்கு அருகில், குறைந்தளவு விவசாய நிலங்களை விலைக்கு வாங்கப்படுகிறது.
அங்கு பெரிய அளவிலான கிணறு அமைத்து, திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டத்தில், பாசனப்பகுதி அல்லாத, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பல கி.மீ., நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, முறைகேடாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
அதோடு, கடத்துார் வாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில், சைடு போர் முறையில் நுாற்றுக்கணக்கான குழாய் அமைத்தும் நீர் திருடப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அணை துவங்கி, கல்லாபுரம், எலையமுத்துார். மடத்துக்குளம், கடத்துார், வன்னியர் வலசு, தளவாய் பட்டணம், தாராபுரம் என ஆற்றின் வழியோரத்தில், செங்கல் சூளை, தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு, அதிகளவு நீர் திருடப்படுவதால் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர், 70 சதவீதம் வரை மாயமாகிறது.
விவசாயிகள் புலம்பல் அணை துவங்கி, கரூர் வரை, பழைய ஆயக்கடடு பாசன நிலங்களில், மூன்று போகம் நெல் சாகுபடி செய்து வந்த நிலையில், நீர் திருட்டு பிரதானமாக மாறியுள்ளதால், ஒரு போக சாகுபடியாக குறைந்துள்ளது.
கடை மடை பகுதிகளில், ஒரு போக சாகுபடி கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் புலம்பி வருவதோடு, நீர் திருட்டை தடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பாண்டு பருவ மழைகள் ஏமாற்றி, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி, அணை நீர்மட்டம் குறைந்தளவு காணப்படுகிறது.
பாசனம் துவக்க முடியாத நிலையில், ஆயக்கட்டு பகுதிகளில், தென்னை, வாழை உள்ளிட்ட நிலைப்பயிர்கள் காய்ந்து வருகின்றன. விவசாயிகள் பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்திய நிலையில், அரசு குடிநீருக்கு திறக்க உத்தரவிட்டது.
தொழிற்சாலை பயன்பாட்டிற்கு, குடிநீர் என்ற பெயரில் நீர் திறக்கப்படுகிறது, என ஆக்ரோஷமடைந்த விவசாயிகள், அணை முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அமராவதி நீர் திருட்டை முழுமையாக தடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.
அதிகாரிகள் குழு 'விசிட்' இதனையடுத்து , திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், கோட்டாட்சியர் குமார், தாசில்தார் ரம்யா, அமராவதி செயற்பொறியாளர் பாலசுப்ரமணி, உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மற்றும் விவசாயிகள் அமராவதி ஆறு மற்றும் கால்வாய்களில் நீர் திருடப்படுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடத்துார், தாராபுரம் உள்ளிட்ட ஆற்றில் நேரடியாக, நுாற்றுக்கணக்கான குழாய்கள் அமைத்து சட்ட விரோதமாக நீர் திருடியதும், ஒரு சில பகுதிகளில், தடுப்பணைகளே அமைத்து நீரை தேக்கி நீரை திருடி வருவதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, குழாய்கள், மின் மோட்டார்களை உடனடியாக பறிமுதல் செய்து, கடும் நடவடிக்கை எடுக்கவும், ஆற்றின் கரைகளில் விதி மீறி அமைந்துள்ள கிணறுகள், போர்வெல்களை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், அமராவதி ஆற்றில் நீர் திருட்டை முழுமையாக கட்டுப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
