/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடையடைப்பு! கிராமங்களில் குப்பை கொட்ட எதிர்ப்பு
/
கடையடைப்பு! கிராமங்களில் குப்பை கொட்ட எதிர்ப்பு
ADDED : அக் 29, 2025 12:56 AM

பல்லடம்: கிராமப் பகுதிகளில், மாநகராட்சி குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மற்றும் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி களில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகளை தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்வதற்கான மையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கிய போது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கைது நடவடிக்கை பாய்ந்தது. இதனை தொடர்ந்து, ஆலோசனையில் ஈடுபட்ட கிராம மக்கள், முதல் கட்டமாக, இடுவாய் உட்பட, ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பாளையம், கரைப்புதுார் ஊராட்சிகளை இணைத்து, கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அவ்வகையில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடுவாய் மற்றும் 63 வேலம்பாளையம் கிராமங்களில், முழுமையான கடையடைப்பு போராட்டம் நடந்த நிலையில், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் பிசுபிசுத்தது. சில இடங்களைத் தவிர்த்து, பெரும்பாலும் கடைகள் திறந்திருந்தன.
இப்பகுதிகளைச் சார்ந்த பனியன் நிறுவனங்கள், விசைத்தறிக்கூடங்கள், கல்குவாரி, கிரசர் நிறுவனங்கள் உள்ளிட்டவையும், கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, செயல்படாமல் இருந்தன. பெரும்பாலான ஆட்டோ, கார் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்களும் வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர்.

