/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடுவம்பாளையம், கரைப்புதுாரிலும் நாளை கடையடைப்பு போராட்டம்
/
இடுவம்பாளையம், கரைப்புதுாரிலும் நாளை கடையடைப்பு போராட்டம்
இடுவம்பாளையம், கரைப்புதுாரிலும் நாளை கடையடைப்பு போராட்டம்
இடுவம்பாளையம், கரைப்புதுாரிலும் நாளை கடையடைப்பு போராட்டம்
ADDED : அக் 26, 2025 10:17 PM
பல்லடம்: ''மாநகராட்சி குப்பை விவகாரத்தில், ஏற்கனவே மூன்று கிராமங்களில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; இத்துடன், கரைப்புதுார் ஊராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியும் இப்போராட்டத்தில் இணைகின்றன'' என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறினார்.
திருப்பூர் அடுத்த இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக வந்த மாநகராட்சி அதிகாரிகளை சிறை பிடித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநகராட்சி குப்பை விவகாரத்தை கண்டித்து, இடுவாய், ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பாளையம் கிராமங்களில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இதுதொடர்பான, ஆலோசனைக் கூட்டம் இடுவாய் கிராமத்தில் நடந்தது. ஊர் பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அதில், கரைப்புதுார் ஊராட்சி மற்றும் இடுவம்பாளையம் கிராமமும் போராட்டத்தில் கைகோர்ப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கோர்ட்டில் மனுத்தாக்கல் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், கிராமங்கள்தோறும் சென்று குப்பைகள், கழிவுகளை கொட்டுவதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இடுவாய், ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பாளையம், கரைப்புதுார் ஊராட்சி மற்றும் மாநகராட்சியின், 58, 60வது வார்டுக்கு உட்பட்ட இடுவம்பாளையம் பகுதியிலும் நாளை (28ம் தேதி) காலை, 6:00 முதல் மாலை 6:00 மணி வரை முழுமையான கடையடைப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் போராட்டமாக ஒரு பக்கம் கடையடைப்பு நடைபெற, மற்றொருபுறம் சட்டப் போராட்டமாக, இன்று (27-ம் தேதி)கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

