/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீருக்கு தவிப்பு; வெயிலில் காத்திருப்பு ரயில்வே ஸ்டேஷனில் சிரமம்
/
குடிநீருக்கு தவிப்பு; வெயிலில் காத்திருப்பு ரயில்வே ஸ்டேஷனில் சிரமம்
குடிநீருக்கு தவிப்பு; வெயிலில் காத்திருப்பு ரயில்வே ஸ்டேஷனில் சிரமம்
குடிநீருக்கு தவிப்பு; வெயிலில் காத்திருப்பு ரயில்வே ஸ்டேஷனில் சிரமம்
ADDED : பிப் 04, 2026 05:28 AM

உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மேம்பாட்டுப்பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அகல ரயில்பாதை பணிகள் மேற்கொண்ட போது, உடுமலை ரயில்வே ஸ்டேஷனி லும், நடை மேம்பாலம் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் அடிப்படை வசதிகள் குறைபாடு, மக்களை தொடர்ந்து பாதிப்படைய செய்கிறது. குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. அதற்கான மேடையும் இடிந்து விழத்துவங்கியுள்ளது. மக்கள் தேவைக்காக பொருத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் முறையாக செயல்படுவதில்லை.
ரயில்களுக்கு காத்திருப்பவர்களும், தொலைதுாரங்களில் இருந்து உடுமலைக்கு வருபவர்களும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். குடிநீர் குழாய்களை சீரமைத்து, மேடை சேதமடையாமல் இருக்க, தடுப்பு ஏற்படுத்த வேண்டும். அதே போல், 'ப்ளாட்பார்ம்'களில் நிழற்கூரை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. வெயிலிலும், மழையிலும் மக்கள் ரயிலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. முதியவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
திறந்தவெளியில் உள்ள இருக்கைகளிலும், பயன்படுத்த முடியாத அளவுக்கு தெருநாய்கள் எண்ணிக்கையும் ரயில்வே ஸ்டேஷனில் அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதிக்கு செல்ல மக்கள் அச்சப்பட வேண்டியுள்ளது.
அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, நீண்ட காலமாக மதுரை ரயில்வே கோட்டத்துக்கு, உடுமலை பகுதி மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், பல முறை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. உடுமலை ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப வசதிகளையும் மேம்படுத்தினால், மக்களும் பயன்பெறுவார்கள்; ரயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் அதிகரிக்கும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, ரயில்வே நிர்வாகத்திடம் மக்கள் பிரதிநிதிகளும் அழுத்தம் தர வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.

