/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஓசை' அற்ற விசைத்தறிகள்... 'விசை' இழந்த பொருளாதாரம்
/
'ஓசை' அற்ற விசைத்தறிகள்... 'விசை' இழந்த பொருளாதாரம்
'ஓசை' அற்ற விசைத்தறிகள்... 'விசை' இழந்த பொருளாதாரம்
'ஓசை' அற்ற விசைத்தறிகள்... 'விசை' இழந்த பொருளாதாரம்
ADDED : ஏப் 18, 2025 11:38 PM

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி, 31வது நாளாக நடைபெறும் காலவரையற்ற போராட்டத்தால், பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க விசைத்தறியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
விசைத்தறியாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை குறைத்து வழங்கி வரும் கூலியை உயர்த்தியும், மூன்று ஆண்டுகளாக மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான புதிய கூலி உயர்வு கேட்டு ஒப்பந்தக் கூலியை குறைத்து வழங்காத வகையில் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி தர கேட்டும், கடந்த மாதம், 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றுடன், 31வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்ந்தது. போராட்டத்தில் கோவை மாவட்டம் சூலுார், சோமனுார், காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி, கண்ணம்பாளையம், சாமளாபுரம், அன்னுார் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி, புதுப்பாளையம், தெக்கலுார், சாமந்தங்கோட்டை, கருவலுார், பெருமாநல்லுார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 31ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூலி உயர்வுக்கு ஒரு சில உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியதை தொடர்ந்து, கடந்த, 2ம் தேதி மத்திய மாநில அரசுகளின் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்ததை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். ஆனால், அதன்பின், பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சோமனுாரில், 11 முதல் 15ம் தேதி வரை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை ஐந்து நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக, அன்னுார், சாமளாபுரம், கண்ணம்பாளையம், சோமனுார், கருமத்தம்பட்டி, தெக்கலுார், கருவலுார், நம்பியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஒரு நாள் கடையடைப்பு நடத்தி வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதுதவிர, சொந்த விசைத்தறி உரிமையாளர்கள், ஆட்டோ, வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர்.
-------------
தெக்கலுார் வட்டார விசைத்தறியாளர் கருத்துகள்
நம்பிக்கையுடன்
காத்திருக்கிறோம்
1. ஆறுமுகம்,- செயலாளர், தெக்கலுார் கிளை, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு:
விசைத்தறி வேலை நிறுத்த தொடர் போராட்டத்தில் கிராமப் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. போராட்டம் நடைபெற்று வரும் கிராமப் பகுதிகளில் உள்ள மக்களிடம் பணம் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது. சட்டசபையில் போராட்டம் குறித்து, எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் பேசியுள்ளனர். இது குறித்து செந்தில் பாலாஜி மற்றும் தங்கம் தென்னரசு ஆகிய இரு அமைச்சர்களும் விரைவில் சுமூகத் தீர்வு எட்டப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த நம்பிக்கையில் காத்திருக்கிறோம்
------------------
சொந்த ஊர் சென்ற
தொழிலாளர்கள்
2. சிவக்குமார், -விசைத்தறி உரிமையாளர், செங்காளிபாளையம்:
ஒரு மாத காலமாக போராட்டம் நடைபெற்று வருவதால் விசைத்தறிக்கூடங்களில் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். மேலும் கூலியாட்களை தொடர்ந்து வேலையில் அமர்த்த முடியாத சூழ்நிலைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி கூலியை கொடுக்காமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை குறைத்து கொடுத்ததால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு இதுவரை, 1,800 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.
------------------
குடும்பம் நடத்த
தொழிலாளர் திணறல்
3. ராமசாமி, - நாட்டிங் மெஷின் ஆப்ரேட்டர்:
கடந்த ஒரு மாதத்திற்கு மேல் வேலை நிறுத்தம் நடைபெற்று வருவதால் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலைக்கு கூலி ஆட்கள் தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி கூட தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தினால் வேலை இழந்துள்ளனர். குடும்ப தேவைகளை சமாளிப்பதற்காக கடந்த, 15 நாட்களாக கோபி, குன்னத்துார் ஆகிய பகுதிகளில் விவசாய வேலைக்கு சென்று வருகிறேன். அன்றாட குடும்ப தேவைகளை சமாளிப்பதற்கே மிகவும் சிரமமாக உள்ளது.
------------------
பேச்சுவார்த்தையில்
தீர்வு கிடைக்கவில்லை
4. பூபதி, -தலைவர், கோவை - திருப்பூர் மாவட்ட கோழிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டமைப்பு:
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை காத்திட புதிய கூலி உயர்வு கேட்டு, கடந்த 2024ம் ஆண்டு ஜன., 12ல் இருந்து தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர் கலெக்டர்களிடமும், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் மற்றும் ஜவுளி துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை, 461 நாட்களை கடந்து போராடி வருகிறோம். பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளது. அதில், கோவையில் நான்கு முறையும், திருப்பூரில் மூன்று முறையும், தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் ஒன்பது முறையும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனாலும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
------------------
வாழ்வாதாரம் போனது
நெருக்கடி கூடியது
5. தமயந்தி, விசைத்தறி தொழிலாளர்:
இன்னும் ஒரு மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி கட்டணம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வீட்டு வாடகை, மின் கட்டணம், மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் என பணமின்றி தவிக்கிறோம். எங்கள் வாழ்வாதாரம் போய் விட்டதால், பலவகையில் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளோம். என்ன செய்வதென்று தெரியவில்லை.
------------------
குடும்ப செலவுக்கே
கடன் வாங்குகிறோம்
6. தங்கமணி, தண்ணீர்பந்தல் பாளையம்:
விசைத்தறி தொழிலை நம்பி வங்கியில் கடன் பெற்றுள்ளோம். மாதந்தோறும் தவறாது வங்கிக்கு தவணை செலுத்த வேண்டியது உள்ளது. அதேபோல கல்லுாரி கட்டணம், அன்றாட குடும்ப செலவிற்கும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு விசைத்தறி உரிமையாளர்களின் குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. புதிய கூலி உயர்வை ஒப்பந்தம் முறையில் போட்டு உறுதிப்படுத்த வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் உயர்த்தி தருவதாக கூறப்படும் கூலியை குறைத்து கொடுக்கவே கூடாது.

