/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம் முற்றுகை; கொள்முதல் செய்த தொகையை வழங்க வலியுறுத்தல்
/
பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம் முற்றுகை; கொள்முதல் செய்த தொகையை வழங்க வலியுறுத்தல்
பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம் முற்றுகை; கொள்முதல் செய்த தொகையை வழங்க வலியுறுத்தல்
பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம் முற்றுகை; கொள்முதல் செய்த தொகையை வழங்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 29, 2025 09:20 PM

உடுமலை; பட்டுக்கூடு கொள்முதல் செய்த தொகையை விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தி, உடுமலை பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை, நேற்று விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
உடுமலை, அமராவதி செக்போஸ்ட் அருகிலுள்ள 'சில்வர் மைன் சில்க்ஸ் பிராசசர்ஸ்' நிறுவனம், கேரளா மாநிலம் மற்றும் கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 81 விவசாயிகளிடமிருந்து, 2024 ஜன., முதல் அக்., வரை, பட்டுக்கூடு கொள்முதல் செய்த, 24 லட்சத்து, 47 ஆயிரத்து, 418 ரூபாய் வழங்காமல், ஒரு ஆண்டாக நிலுவை வைத்துள்ளது.
இது குறித்து, விவசாயிகள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் அடிப்படையில், கடந்த, 14ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்குவதாக, அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை வழங்காததால் அதிருப்தியடைந்த விவசாயிகள், உடுமலை மைவாடியிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கேரளா மாநிலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் திலகவதி, வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சு நடத்தினர். இதில், உயர் அதிகாரிகளிடம் பேசி, விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகளிமிருந்து கொள்முதல் செய்த பட்டுக்கூடுகளுக்குரிய தொகையை வழங்காமல், ஒரு ஆண்டாக இழுத்தடித்து வருகின்றனர். மேலும், 'மொபைல் அங்காடி' என்ற உரிமம் பெற்று, அரசுக்கு செலுத்துவதாக கூறி, கொள்முதல் செய்யும் தொகைக்கு, விவசாயிகளிடமிருந்து வசூலித்த தொகையும் அரசுக்கு செலுத்தாமல் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.
இது குறித்து புகார் அளித்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்காமல் உள்ளது. விரைவில், முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்தனர்.