/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறன் சிறக்க ஆடை உற்பத்தி பயிற்சி
/
திறன் சிறக்க ஆடை உற்பத்தி பயிற்சி
ADDED : செப் 15, 2025 12:16 AM
திருப்பூர்; பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், திறன் மிகு தொழிலாளரை பணி அமர்த்தும்வகையில், நிப்ட்-டீ கல்லுாரியின் பயிற்சி மையத்தில், பகுதி நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து, தொழிலாளர் மற்றும் தொழில் முனைவோருக்கு ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அப்பேரல் மெர்ச்சன்டைசிங், பேட்டர்ன் மேக்கிங், குவாலிட்டி கன்ட்ரோல், ஓவர் லாக், பிளாட் லாக், பவர் சிங்கர் டெய்லரிங் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது. இதுவரை ஆறு பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்துள்ளன. ஏழாவது பயிற்சி வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்றுவருகிறது.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மணியன் கூறியதாவது:
ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், இப்பயிற்சி வகுப்பில் இணைந்து, ஆடை உற்பத்தி சார்ந்த தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்; புதியவர்கள் பயிற்சி வாயிலாக திறன் மிகு தொழிலாளராக, ஆரம்ப நிலையிலேயே நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெறமுடியும். புதிய தொழில்முனைவோர், ஆடை உற்பத்தி சார்ந்த நுணுக்கங்களை கற்று, தெளிவுபெறலாம்.
தினமும் காலை, 7:00 முதல் 8:30 மணி வரை மணி வரை வகுப்புகள் நடைபெறும். வேலைக்கு செல்வோர் வசதிக்காக, வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டுமே வகுப்பு நடத்தப்படுகிறது.
தினசரி வகுப்பில் இணைவோருக்கு, மூன்று மாதங்களும்; ஞாயிற்றுக் கிழமை மட்டுமான வகுப்பில் இணைவோருக்கு ஆறுமாதம் என்கிற அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆடை உற்பத்தி நிறுவனங்களில், திறன்மிகு தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது. எனவே, பயிற்சி முடித்த உடனேயே, சிறந்த சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெறமுடியும்.
ஏழாவது பயிற்சி வகுப்புகள், வரும் 28ம் தேதி முதல் துவங்குகின்றன. அப்பேரல் மெர்ச்சன்டைசிங் அண்டு குவாலிட்டி கன்ட்ரோல், பேட்டர்ன் மேக்கிங் (மேனுவல் மற்றும் சாப்ட்வேர்), பேட்டர்ன் மேக்கிங் டெய்லரிங் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும், தலா 25 நபர்கள் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, 78451 84962, 95979 14182 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.