/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டுமான தொழிலாளருக்கு திறன் பயிற்சி
/
கட்டுமான தொழிலாளருக்கு திறன் பயிற்சி
ADDED : ஜூலை 25, 2025 11:20 PM
திருப்பூர்; 'கட்டுமான நலவாரிய உறுப்பினர்கள், ஊக்கத்தொகையுடன் திறன் பயிற்சி பெற முன்வரலாம்,' என, தொழிலாளர் துறை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின், நலத்திட்ட அட்டவணையில், கல் உடைப்பவர், கல் வெட்டுபவர், கல்பொடி செய்பவர், கொத்தனார், செங்கல் அடுக்குபவர், தச்சர், பெயின்ட்டர், கம்பி வளைப்பவர் உட்பட பிட்டர், சாலை குழாய் பதிப்பு பணியாளர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், கிணறு தோண்டுபவர், வெல்டர் உட்பட மொத்தம் 54 வகை கட்டுமானத் தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில், 52 ஆயிரத்து, 595 பேர் உறுப்பினராக உள்ளனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அறிவிப்பின்படி, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தொழில் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து அவர்களின் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் செந்தில்குமரன் அறிக்கை:
நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து, மாவட்ட அளவில், மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.,) மூலமாக பயிற்சி பெறலாம்.
மேஷன், கார்பென்டர்; கம்பி வளைப்பு வேலை, தச்சு வேலை, மின் பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம்பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், டைல்ஸ் கற்கள் ஒட்டுதல் உள்ளிட்ட 12 தொழில் பிரிவுகளின் கீழ் ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும், 800 ரூபாய் ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.
மாவட்டத்தில், கட்டுமான தொழில் இனங்களில் பதிவு பெற்ற, 1,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தொழிலாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான தொழிலாளர்கள், நவீன தொழில்நுட்பங்கள்மூலம் கூடுதல் திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.