/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேகமெடுக்காத ரயில் நிலைய மேம்பாடு
/
வேகமெடுக்காத ரயில் நிலைய மேம்பாடு
ADDED : டிச 28, 2025 06:59 AM

திருப்பூர்: 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணி, 2023ல் துவங்கியது. இருப்பினும், இந்தாண்டில் கூட, முகப்பு பகுதி, உயரக் கொடிக்கம்பம் உள்ள இடம், இரண்டாவது பிளாட்பார்ம் டிக்கெட் கவுன்டர் மற்றும் பார்க்கிங் பகுதி, முதல் பிளாட்பார்ம் ஓய்வறை, இருபாலருக்கான தனித்தனி கழிவறை, பிளாட்பார்ம் அகலப்படுத்தும் பணி, முன்பதிவு டிக்கெட் கவுன்டர் நவீனத்துவம் உள்ளிட்ட பணிகள் பாதி நிலையிலேயே இந்தாண்டும் முடங்கியுள்ளது.
அதேசமயம், முதல் பிளாட்பார்மில் டிக்கெட் கவுன்டர் விரிவுபடுத்தி இடம் மாற்றப்பட்டது. இரண்டாவது பிளாட்பார்மில் புதிய எஸ்கலேட்டர் நிறுவப்பட்டது. பார்க்கிங் பெரும் பிரச்னையாக இருந்த வந்த நிலையில், டூவீலர் ஸ்டாண்ட் மறுசீரமைப்பு செய்து திறக்கப்பட்டுள்ளது.
கோவை - ஈரோடு வழித்தடத்தில், திருப்பூர் வழியோர ஸ்டேஷன் என்பதால், புதிய ரயில் இயக்கத்துக்கு வாய்ப்பு இல்லை. கோவையில் இருந்து இயக்கப்படும் புதிய மற்றும் சிறப்பு ரயில்கள் அடுத்த ஸ்டேஷன் திருப்பூர் என்பதால், திருப்பூருக்கும் பயன் தந்து வருகின்றன. நடப்பாண்டில் துவக்கி வைக்கப்பட்ட எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
காற்றில் பறந்த வாக்குறுதி கடந்த, 2024ல் திருப்பூர் வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்., குமரன் நினைவிடம் துவங்கி, ரயில்வே ஸ்டேஷன் முகப்பு நுழைவு வாயில் வந்து, தலைமை தபால் நிலையம் வந்து பஸ் வெளியேறும் வகையில், ரயில்வே ஸ்டேஷனுக்குள் பஸ்கள் வந்து செல்ல வழி உருவாக்கப்படும், என்றார். இதற்காக, நுாற்றாண்டு கால நுழைவாயில் இடித்து அகற்றப்பட்டு, புதிய நுழைவாயில் கட்டப்பட்டது.
ஆனால், புதிய வழித்தடம் அமைக்கவில்லை. பஸ் உள்ளே சென்று திரும்புவதற்கான அமைப்பும் உருவாக்கப்படவில்லை. பொது மேலாளரின் கடந்தாண்டு வாக்குறுதி இந்தாண்டு காற்றுடன் கரைந்திருக்கிறது.

