ADDED : டிச 09, 2024 04:57 AM

திருப்பூர்: நீர் கசிவால் தார்ரோடு சேதமடைவதை தடுக்க, சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே, இரண்டு சிறுபாலம் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை துவக்கியது.
திருப்பூர் - மங்கலம் இடையேயான மாநில நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், ஊராட்சி பகுதியில் ரோடு நன்றாக இருக்கிறது. ஆனால், பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி காரணமாக, மாநகராட்சி எல்லையில், பல்வேறு இடங்களில் ரோடு குண்டும், குழியுமாக மாறி விட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாரப்பாளையம் முதல் பெரியாண்டிபாளையம் வரை, நான்கு வழிச்சாலையோக மேம்படுத்தப்பட்டுள்ளது. அடுத்துள்ள சேனா பள்ளம் முதல் கோழிப்பண்ணை, லிட்டில் பிளவர் பள்ளி முதல், குளத்துக்கடை வரையில் உள்ள ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதிகளில், ரோடு சேதமாகியுள்ளது.
இடுவாய் சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், சிற்றோடைகள் வழியாக ஆண்டிபாளையம் குளத்துக்கு வருகிறது. பாதாள சாக்கடை கால்வாய் சுத்திகரிப்பு மையம் அமைத்த போது, கால்வாய் அடைக்கப்பட்டது. ரோட்டின் தெற்கு பகுதியில் தேங்கி நிற்பதால், தண்ணீர் கசிந்து, ரோட்டில் தேங்கி, குளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒருமழை பெய்தாலும், பல மாதங்களுக்கு இதே நிலை தொடர்கிறது. இதனால், அடிக்கடி ரோடு சேதமாகி, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சிறு கால்வாய் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
----
2 படங்கள்
சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே இரண்டு இடங்களில் சிறு பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.