/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்ன வெங்காய விவசாயிகள் கண்ணீர் சிந்தக்கூடாது!
/
சின்ன வெங்காய விவசாயிகள் கண்ணீர் சிந்தக்கூடாது!
ADDED : பிப் 23, 2024 12:58 AM
பொங்கலுார்;''சின்ன வெங்காய அறுவடை விரைவில் துவங்க உள்ளது. விலை வீழ்ச்சியை தடுக்க சின்ன வெங்காய ஏற்றுமதி தடைக்கு விலக்கு அளிப்பதோடு, பிரத்யேக ஏற்றுமதிக் குறியீடு வழங்கப்பட வேண்டும்'' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் வெங்காய அறுவடை சீசன் முடிந்துவிடும். அப்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அபரிமிதமாக உயர்வது வழக்கம். இதை கருத்தில் கொண்டு, கடந்த டிசம்பரில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. உற்பத்திச் செலவை விட குறைவாக விலை போவதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
பெரிய வெங்காயம் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. பெரும்பான்மையான மக்கள் உணவு தேவைக்கு பெரிய வெங்காயத்தையே பயன்படுத்துகின்றனர். சின்ன வெங்காயத்துடன் ஒப்பிடும் பொழுது இதற்காகும் உற்பத்திச் செலவு குறைவு.
சின்ன வெங்காயம் கர்நாடகாவின் சில பகுதிகள் மற்றும் தமிழகத்தில் பரவலாக பயிரிடப்படுகிறது. இதன் நுகர்வு தமிழகம், கர்நாடகாவில் மட்டுமே அதிகம் உள்ளது. உலகெங்கிலும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு மட்டுமே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சின்ன மற்றும் பெரிய வெங்காயத்திற்கு ஒரே ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. வெங்காயத்திற்கு தடை விதிக்கும் பொழுது ஒட்டுமொத்த வெங்காய விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
சின்ன வெங்காயம் ஒரு கிலோவிற்கு உற்பத்தி செலவு, 25 ரூபாய் ஆகிறது. ஆனால் சில்லறை விற்பனை கடைகளிலேயே கிலோ, 25க்கு விற்கப்படுகிறது. விவசாயிடம், 15 முதல், 20 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.
தற்போது சின்ன வெங்காய அறுவடை துவங்க உள்ளது. விவசாயிகள் விலை வீழ்ச்சியை சந்திக்காமல் இருக்க மத்திய அரசு சின்ன வெங்காய ஏற்றுமதி தடைக்கு விலக்கு அளிக்க வேண்டும். தனித்தனி ஏற்றுமதி குறியீட்டு எண்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.