/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய அளவிலான செஸ் போட்டி: மாணவர்கள் அசத்தல்
/
குறுமைய அளவிலான செஸ் போட்டி: மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 16, 2025 09:22 PM

உடுமலை; உடுமலையில் நடந்த குறுமைய அளவிலான செஸ் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு குறுமைய விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. உடுமலை குறுமைய அளவிலான போட்டிகள் நேற்றுமுன்தினம் துவங்கியது.
சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிர்வாகம் நடப்பாண்டுக்கான உடுமலை குறுமையப்போட்டிகளை நடத்துகிறது. தேஜஸ் அரங்கில் செஸ் போட்டிகள் நடந்தது.
சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) ஆலிஸ் திலகவதி, போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகள் 11 வயது, 14, 17 மற்றும் 19 வயதினருக்கான பிரிவுகளில் நடந்தது.
குடிமங்கலம் வட்டார அளவில், 11 வயதினருக்கான மாணவர் பிரிவில், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டு, மூன்று இடங்களையும், மாணவியருக்கான பிரிவில் சோமவாரப்பட்டி பள்ளி முதல் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது.
14 வயதினருக்கான பிரிவில், கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, மாணவியருக்கான பிரிவில் முதல் இரண்டு இடங்களிலும், மாணவர்களுக்கான போட்டியில் முதலிடத்திலும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து, மாணவர்களுக்கான போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும், மாணவியருக்கான பிரிவில் பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.
17 வயது மாணவர்களுக்கான பிரிவில், குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மற்றும் மூன்றாமிடத்திலும், மாணவியர் பிரிவில் முதலிடத்திலும் வெற்றி பெற்றன. கொங்கல்நகரம் உயர்நிலைப்பள்ளி இருபிரிவிலும் இரண்டாமிடம் பெற்றது.
19 வயதினருக்கான போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரிவில் இரண்டாமிடம், மாணவியர் பிரிவில் முதல் இரு இடங்களிலும் வெற்றி பெற்றது.
குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரிவில் முதலிடமும், மாணவியர் பிரிவில் மூன்றாமிடமும் பெற்றன. போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் விஜயபாண்டி ஒருங்கிணைத்தார்.