/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வேளாண் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடாது'
/
'வேளாண் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடாது'
'வேளாண் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடாது'
'வேளாண் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடாது'
ADDED : பிப் 18, 2025 07:07 AM
பல்லடம்; ''வேளாண் மின் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நினைத்தால் போராட்டங்களை கையில் எடுப்போம்'' என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது.
இதன் நிறுவனர் ஈசன் முருகசாமி அறிக்கை:
தமிழக அரசு, வேளாண் மின் இணைப்புகளுக்கு நாள்தோறும் 18 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கி வஞ்சிக்கிறது. தமிழகத்தில், கரும்பு விவசாயிகள் அரசுக்கு கட்டணம் இன்றி இலவசமாக வழங்கும் 'மொலாசஸ்'-ல் இருந்து மது தயாரித்து, டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு, 46 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தமிழக அரசு, வேளாண் மின் இணைப்புகளுக்காக மின்வாரியத்துக்கு செலுத்தும் 7,300 கோடி ரூபாயை இலவசம் என்று சொல்லி தொடர்ச்சியாக விவசாயிகளை இகழ்ந்து வருகிறது. கோர்ட் உத்தரவை பின்பற்றி அனைத்து வேளாண் மின் இணைப்புகளையும் பொது மின் பாதையோடு இணைக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு, தனி மின்பாதை அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது.
தமிழக அரசு திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் மீட்டர்கள், சிம் கார்டுடன் இணைந்து வருபவை. எதிர்காலத்தில் விவசாயிகளை கட்டணம் செலுத்த வைப்பதற்காகவே இது கொண்டுவரப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம், 500 முதல் 1,000 அடிக்கு மேல் உள்ளதால், விவசாயிகளின் மின் தேவை அதிகம் உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் மின்சாரம் பயன்படுத்த இயலாது. விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். கைவிடாவிட்டால், போராட்டங்களை கையில் எடுப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

