ADDED : மார் 06, 2026 04:44 AM

திருப்பூர்: நாச்சிபாளையத்தில் இருந்து மானுார் செல்லும் ரோட்டில், கொட்டப்பட்ட குப்பைக்கு தீ வைத்ததால், கடும் புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் இருந்து கொண்டு சென்று, முதலிபாளையம் ஊராட்சி எல்லைக்குள் குப்பை கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், முதலிபாளையம் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, மானுார் ரோட்டில் கொட்டப்படுகிறது.
குறிப்பாக, செந்தில் நகர், ராயல் பார்க் பகுதியில், குடியிருப்புகளுக்கு மிக அருகே குப்பை கொட்டப்பட்டது; பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரவில் தீ வைக்கப்பட்டது. இதனால், கடும் புகை மண்டலம் உருவாகி, யாரும் அவ்வழியாக சென்றுவர முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
ஊராட்சியில் இருந்து குடியிருப்புக்கு அருகே குப்பை கொட்டுகின்றனர். தீ வைத்ததால், அப்பகுதியில் யாரும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. கலெக்டர் கூறித்தான் குப்பை கொட்டுவதாகவும், அதற்காக, குழி தோண்டுவதாகவும் கூறுகின்றனர். குப்பைக்கு தீ வைத்துள்ளதாக புகார் செய்ததால், தீயணைப்பு துறையினர் அணைத்துள்ளனர்; இருப்பினும், புகையால் இடையூறு ஏற்படுகிறது. குப்பை கொட்டு வதில் ஏதாவது பிரச்னை என்றால், கலெக்டரிடம் போய் கூறுங்கள்' என்கின்றனர். குப்பை பிரச்னையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் தான் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
