ADDED : டிச 25, 2025 05:47 AM

திருப்பூர்: கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், ரயில்களை தொடர்ந்து வேகமாக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்கள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. மார்கழி துவக்கம் முதல் ரயில் தண்டவாளங்களில் இருந்து குறிப்பிட்ட துாரம் தெளிவாக தெரிவதே அரிதாக உள்ளது. அடுத்தடுத்து ரயில்களுக்கு சிக்னல் கிடைப்பதில் தாமதம் எழுகிறது. ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தை விட வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகம் என்பதால், அங்கிருந்து தமிழகம் வரும், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக பயணிக்கும் ரயில்கள் தாமதமாக வருகின்றன; டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளும், ரயிலுக்காக பிளாட்பார்மில் காத்திருப்போரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நேற்று, திப்ரூகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22504) திருப்பூருக்கு காலை 9:45க்கு வரவேண்டும்; ஆனால், 1:45க்கு தான் வந்தது.
புதுடில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12626) திருப்பூருக்கு காலை 11:38க்கு வர வேண்டும்; ஆனால் 11 மணி நேரம் தாமதமாக இரவு 10:08க்குத்தான் வருமென அறிவிக்கப்பட்டது.
பிற மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் தாமதமாவதால், அதற்கேற்ப உள்ளூரில் இயங்கும் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்களின் இயக்கமும் மாறுகிறது.

