/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கானல் நீரான சோலார் மின் திட்டம் விசைத்தறியாளர்கள் வேதனை
/
கானல் நீரான சோலார் மின் திட்டம் விசைத்தறியாளர்கள் வேதனை
கானல் நீரான சோலார் மின் திட்டம் விசைத்தறியாளர்கள் வேதனை
கானல் நீரான சோலார் மின் திட்டம் விசைத்தறியாளர்கள் வேதனை
ADDED : டிச 24, 2025 06:48 AM

பல்லடம்: நலிவடைந்து வரும் விசைத்தறி தொழிலை பாதுகாக்கவும், மின் கட்டண செலவை குறைக்கவும், சோலார் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை, வெறும் கானல் நீராகவே உள்ளது.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
பல்வேறு இடையூறுகள் காரணமாக, கடந்த, 2014ம் ஆண்டுக்குப் பின், விசைத்தறி தொழில் நலிவடைந்துவிட்டது. பல ஆண்டுகளாக இத்தொழிலை நம்பி உள்ளவர்கள் மட்டுமே இதில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலை நடத்த முடியாமல் பலர், விசைத்தறிகளை பழைய இரும்புக்கு விற்றதால், தறிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.
விசைத்தறி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், சோலார் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். சாதாரணமாக, 10 முதல் 15 விசைத்தறி வைத்துள்ளவர்களுக்கு, மாதம், 5 ஆயிரம் யூனிட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழக அரசு வழங்கும், ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் போக, 4 ஆயிரம் யூனிட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சோலார் மின் உற்பத்தி திட்டத்தை, விசைத்தறிகளுக்கு அமல்படுத்துவதால், 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் குறையும். இதன் வாயிலாக, மின் கட்டண செலவும் குறையும். கடந்த காலத்தில், மத்திய அரசின் பவர் டெக்ஸ் இந்தியா திட்டம் வாயிலாக, பேட்டரி பேக்கப்புக்காக சோலார் வழங்கப்பட்டது. அதன் பிறகு அத்திட்டமும் கைவிடப்பட்டது. நலிவடைந்து வரும் விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் நோக்கில், சோலார் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தி தருவதன் மூலம், தொழில் பாதுகாக்கப்படும்.
விசைத்தறிக்கூடங்களின் மேற்கூரையிலேயே சோலார் பேனல்களை அமைக்கலாம். தற்போதுள்ள சூழலில், லட்சக்கணக்கில் செலவழித்து, விசைத்தறியாளர்களால் சோலார் பேனல்கள் அமைக்க இயலாது. எனவே, மத்திய மாநில அரசுகள், மானியத்துடன் சோலார் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தி தர வேண்டும். இது, விசைத்தறியாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

